கோவா:
ஒருதலைக்காதலால் கல்லூரி மாணவியை சுட்டுகொன்று, தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயன்ற சம்பவம் கோவாவில் நடைபெற்றுள்ளது.
கோவாவில் கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற வாலிபர், தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவா மாநிலம் பார்டா நகரத்தின் அருகிலுள்ள லோடோலிம் கிராமத்தில் தனது பெற்றோருடன் வசித்து வருபவர் நிகில் குமார். 21 வயது இளைஞர். இவர் அரசு கல்லூரியில் பி காம் படித்து வருகிறார். இவர்களது சொந்த ஊர் ஜார்கண்ட் மாநிலம். நிகில்குமாரின் தந்தை தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றுகிறார்.
பக்கத்து கிராமமான, கரன்சாலே மத்கை கிராமத்தை சேர்ந்தவர் சுஜாதா கோகுல்தாய் நாயக். அரசு கல்லூரி மாணவி. சம்பவத்தன்ற, சுஜாதா நாயக் தனது வீட்டில் தாய் மற்றும் உறவினர்களுடன் இருந்தார். அவரது தந்தை வெளியில் சென்றிருந்தார்.
அப்போது, வீட்டுக்குள் புகுந்த நிகில் குமார், தனது தந்தையின் கைத்துப்பாக்கியால், சுஜாதாவை நோக்கி இருமுறை சுட்டார். இதில் மார்பில் குண்டு பாய்ந்தது. ரத்தவெள்ளத்தில் துடித்த சுஜாதா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
உடனடியாக அங்கிருந்து தப்பிய ஓடிய நிகில் தனது வீட்டிற்கு வந்தார். வீட்டில் அனைவர் முன்னிலையிலேயே கதவை தாழிட்டுகொண்டு தனது வயிற்றில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். குண்டு சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்களும், அக்கம்பக்கத்தினர் குவிந்தனர்.
சுஜாதா குடும்பத்தினரும், நிகில் குடும்பத்தினரும் ஒரே பகுதியில் 15 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர். நிகில் சுஜாதாவை ஒருதலையாக காதலித்ததாக தெரிகிறது.
தகவலறிந்த பாண்டா நகர போலீசார் விரைந்து வந்து, படுகாயமடைந்த நிகில் குமாரை கோவா அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒருதலைக்காதலால் இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரிகிறது. கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் கோவாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.