ரியோவில் நடைபெறும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் பெற்று உலக சாதனையும் படைத்த தேவேந்திர ஜஜாரியாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
ஆனால் அவர் அந்த சாதனையை நிகழ்த்திய தருணத்தில் அங்கு அவரை ஊக்குவிக்கவோ, கண்டுகொள்ளவோ அங்கு யாரும் இல்லை என்பது வருந்தத்தக்க உண்மை.
1devendra
தேவேந்திரா ஏற்கனவே 2004-இல் ஏதேன்ஸில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸில் ஈட்டி எறிதலில் 62.15 மீட்டர்கள் தூரம் ஈட்டி எறிந்து உலகசாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த 2016 போட்டிதான் தேவேந்திரா கலந்துகொள்ளும் கடைசி பாராலிம்பிஸ் ஆகும்.
எனவே மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கிய தேவேந்திரா தனது முதல் வாய்ப்பில் 57.25 மீட்டரும், இரண்டாவது வாய்ப்பில் 60.7 மீட்டரும் எறிந்தார்.
அவருக்கு புதிய ஈட்டி கொடுக்கப்பட்டிருந்தது. புது ஈட்டியை கையாளுவதில் அவருக்கு பழக்கமில்லை என்றாலும் ஒட்டு மொத்த பலத்தையும் திரட்டி ஈட்டியை எறிய அது துப்பாக்க்கி குண்டுபோல சீறிப்பாய்ந்தது.
ஈட்டி தரையைத் தொடுமுன்னர் அறிவிப்பாளர் “இது உலக சாதனை. உலக சாதனை” என்று துள்ளினார். ஆம், தேவேந்திரா எறிந்த ஈட்டி இம்முறை 63.97 என்ற சாதனை தூரத்தில்போய் குத்தி நின்றது.
தனது கடைசி ஆட்டத்தின், கடைசி முயற்சியில் சரித்திரம் படைப்போம் என்று அந்த தங்கமகனே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அதன்பின்னர் மைதானத்தில் அந்த சாதனை வீரன் மூவர்ணக்கொடியை கையில் வைத்துக்கொண்டு மகிழ்ச்சியில் ஆடிய தாண்டவத்தைப் பார்க்க கண்கள் கோடி வேண்டும்.
ஆனால் இது எந்தத் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படவில்லை.
யூடியூப் மட்டுமே இதை ஒளிபரப்பியது. பத்திரிக்கையாளரோ ஊடகங்களோ யாருமே அங்கு இல்லை. பாராலிம்பிக்ஸ் வீரர்களுக்கு கேல்ரத்னா விருதும் இல்லை.
ஒலிம்பிக் வீரர்களை விட சாதனை படைத்தது பாராலிம்பிக்ஸ் வீரர்களே! தங்க பதக்கத்தை இம்முறை இந்த மண்ணுக்கு கொண்டுவந்தவர்களும் அவர்களே!
ஆனாலும் பாராலிம்பிக்ஸ் வீரர்கள் மீது மக்களும் ஊடகங்களும் காட்டும் பாராமுகம் வேதனைக்குரியதே!