சென்னை:
தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் பங்கை அளிக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அங்கு தமிழர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும் இன்று தமிழகம் முழுதும் முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடக்கிறது.
விவசாய சங்கங்கள் அறிவித்த இந்த முழு அடைப்பிற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளன. வணிகர் சங்கங்கள் உட்பட பல்வேறு சங்கங்களும் இந்த முழு அடைப்பில் கலந்துகொள்வதை அடுத்து, பெரும்பாலான கடைகள் மூடியிருக்கின்றன. லாரி, தனியார் பேருந்துகளும் ஓடவில்லை.
அதே நேரம், ஓட்டல்கள் செயல்படும் என்று தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடசுப்பு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “காரிவி பிரச்சினையை தீர்க்க, சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பந்த் நடத்தினால் தமிழக அரசுக்கு சங்கடம் ஏற்படும். ஆகவே ஓட்டல்கள் இந்த பந்த்தில் கலந்துகொள்ளாது. இன்று முழுதும் ஓட்டல்கள் இயங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அதே நேரம் சிறு உணவகங்கள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன. அதன் உரியமையாளர்கள் பலர், “தமிழ்நாடு ஓட்டல் சங்க தலைவரின் அறிக்கை எங்களை கட்டுப்படுத்தாது. இன்றைய முழு அடைப்பில் நாங்கள் உணர்வு பூர்வமாக கலந்துகொள்வோம். கடைகளை திறக்கமாட்டோம்” என்று தெரிவித்துள்ளனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தஞ்சை, கடலூர், வாணியம்பாடி, ஆம்பூர், அரக்கோணம் போன்ற பல பகுதிகளில் சிறிய ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன.