kam

 

கிப்புத்தன்மை குறைந்து வருவது போன்ற விவகாரங்களுக்காக தேசிய விருதை திரும்ப ஒப்படைக்கப் போவதில்லை; அப்படி ஒப்படைப்பதால் எந்த பயனும் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

மாட்டுக்கறி தின்றதாகச் சொல்லி தாத்ரியில் இஸ்லாமிய முதியவர் படுகொலை செய்யப்பட்டது, எழுத்தாளர்கள் கல்பர்கி உட்பட படைப்பாளிகள் தாக்கப்பட்ட கொல்லப்பட்ட விவகாரம், புனே திரைப்பட கல்லூரி மாணவர்கள் போராட்டம் போன்றவற்றை முன்வைத்து எழுத்தாளர்கள், திரைப்பட கலைஞர்கள் தங்களுக்கு மத்திய அரசு வழங்கிய விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருகிறார்கள்.

இது குறித்து பேட்டி அளித்த நடிகர் கமல்ஹாசன், “ விருதுகளைத் திருப்பித் தருவதால் எந்த பயனும் கிடையாது. சகிப்புத்தன்மை குறைந்து வருவதை அறிவுப்பூர்வமாகத்தான் தோற்கடிக்க வேண்டும். விருதுகளை திருப்பித் தருவதால் எந்த ஒரு பலனும் ஏற்படாது. விருதுகளை திருப்பிக் கொடுப்பது என்பது அரசை அவமதிக்கும் செயலாகும். சகிப்புத்தன்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரைகள், திரைப்படங்களை உருவாக்க வேண்டும்” என்றார்.

அவரது பேச்சுக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கமலின் கருத்தைக் கண்டித்து, சமூகவலைதளங்களில் பலரும் எழுதிவருகிறார்கள்.

Arun Ambalavanar அவர்களின் பதிவு:

“கமல் அடிப்படையில் ஒரு மொத்த வியாபார சினிமாக்காரன். கோடாம்பாக்கத்தில் பண பலமும் செல்வாக்கும் உள்ளவர். அவர் ஒரு “மேதையிலும் மேதை” “சிறந்த படைப்பாளி” என்பவை உண்மை என்றால் வியாபார சக்திகளிலிருந்து முற்றுமுழுதாக விலகி அடூர் கோபால கிருஷ்ணனின் முகாமுகம் போன்றதான ஒரு படத்தையேனும் தமிழில் குறைந்த பட்ஜெட்டிலேனும் முதலிட்டோ நடித்தோ தந்திருக்கமுடியும்.

அவரைப்பற்றிய இரண்டாவது மாயை அவர் ஒரு முற்போக்கான நடவடிக்கையாளர் என்பது. வெகுசன சாதனங்களுக்கூடாக இவ்வாறான பிரமையை இவர் கட்டிவைத்திருக்கின்ற போதிலும் அது உண்மையல்ல. அருந்ததி ராயைப்போல Grass root level இல் சாதி அடக்குமுறை போன்ற எந்த முற்போக்கான போராட்டத்திலும் பங்கெடுக்காதவர்.தசாவதாரம் படத்தில் பிராமண ஆதிக்கம், தலித் மக்களின் மீதான அடக்குமுறை என்பவற்றுக்கெதிரான முற்போக்கான பல விடயங்கள் வருகின்றன. இவை புதிய தலித் எழுச்சி நடைபெறுகின்ற தமிழ் நாட்டில் வியாபாரப்படங்களின் சூத்திரத்துக்கு அவசியமானவை. 2002 ம் ஆண்டு திக்விஜே சிங் என்பவரால் இயக்கப்பட்ட மாயா என்ற எவரின் ஆன்மாவையும் உலுக்கக்கூடிய ஒரு கிந்தி மொழிப்படம் வெளிவந்தது. இன்றும் இந்தியாவின் சில கிராமப்புறங்களில் நடக்கின்ற ஒரு பிராமணக்கொடுமையைப்பற்றியது. (பெண் குழந்தை பூப்படைந்ததும் அவ்வூரின் கோயில் பிராமண அர்ச்சகர்களால் கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள் வைத்து இந்து தர்மத்தின் பெயரால் குழுவாக வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கும் சடங்கு) இம்மாதிரியான ஒரு படத்தை கமலகாசன் நமக்கு தரட்டும். அதன் பிறகு நான் கமல் உண்மையிலேயே ஒரு சீர்திருத்தவாதி என்பதை ஒத்துக்கொள்ளுகிறேன்.போகிற போகிற போக்கில் இனி Hollywood படத் தயாரிப்பாளர்களும்; தங்களுடைய படங்களை இந்தியாவுக்கு outsourcing பண்ணினாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை.”

 

ஞாநி சங்கரன் அவர்களின் பதிவு:

கமல், ரஜினி முதலானோர் எந்த அரசுடனும் தமக்கு விரோதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில் சமர்த்தர்கள். எனவே விருதை திருப்பித்தர அவசியமில்லை என்று கமல் கூறியதில் எனக்கு எந்த வியப்புமில்லை. திரைப்படம் முறையாகக் கற்பிக்கப்படவேண்டும் என்று பல தருணங்களில் பேசிவரும் கமல், திரைப்படக் கல்விக்கென்று இந்தியாவில் இருக்கும் முதன்மையான கல்வி அமைப்பான புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் 150 நாள் நடத்திய போராட்டம் பற்றி மோடி ஸ்டைலில் மௌனமாகவே இருந்தார் என்பதை மறக்கவேண்டாம்.

இதே போல பலரும் கமலின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.