சென்னை
உட்லேண்ட்ஸ் ஓட்டல் மீது பெட்ரோல் பாட்டிலை தாங்களே வீசியதாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 4 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.
அப்போது அவர்கள், “”காவிரி நதிநீர் பிரச்சினையையொட்டி, கர்நாடகாவில் தமிழர்களின் வாகனங்களும், கடைகளும் தொடர்ச்சியாக கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு தமிழ் இளைஞர் தமிழர்களுக்கு ஆதரவாக முகநூலில் பதிவு செய்தார் என்பதால், அவரை கன்னட வெறியர்கள் சரமாரியாக தாக்கியும், மண்டியிட்டு மன்னிப்பும் கேட்க வைத்த காணொளி பரவியது.
இதை கண்டிக்கும் விதமாகவே அதிகாலை மூன்று மணி அளவில், தந்தை பெரியார் திராவிடர் கழக இளைஞரணி பொறுப்பாளர் சசிகுமார் அவர்கள் தலைமையில் திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் வாசுதேவன், தோழர் விக்னேஷ், தோழர் தினேஷ் குமார் என நாங்கள் நால்வரும் உட்லேண்ட்ஸ் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தினோம்” என்று வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், “கன்னடர் என்பத்காக தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடமாட்டோம். பிழைப்பிற்கு ஏதோ தொழில் செய்யும் சிறு வணிகர்கள் மீதான தாக்குதலிலும் எங்களுக்கு உடன்பாடில்லை. ஆகவே, மிகப்பெரிய தொழில் அதிபரும், கன்னட பார்ப்பனருமான கிருஷ்ணா ராவ் என்பவருக்கு சொந்தமான ஓட்டலை தேர்ந்தெடுத்ததோம். ஆனாலும் அவரை தாக்குவது எங்கள் நோக்கமல்ல என்பதால் விடுதியை மட்டும் சேதப்படுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தனர்.