கேரளாவின் ‘அறுவடை திருநாள்’ ஓணம்
ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம்.
சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமணன் அவதரித்ததும் அன்றுதான் எனவும் வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன..
கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் கொண்டாடப்படுகிறது
.கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதைக் கேரளாவின் “அறுவடைத் திருநாள்” என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாகக் கொண்டாடப்படுகிறது.
ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகையென (கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகைபற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் அறுவடைத்திருநாள் பொங்கல் என்று சிறப்பிக்கப்படுகிறது. அதுபோல, கேரளாவின் “அறுவடைத் திருநாள்“என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகை கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
ஓணம் பண்டிகை கேரளா தவிர தென் தமிழகமான கன்னியாகுமரி, பத்மநாபபுரம் அரண்மனை , மார்த்தாண்டம் பகுதிகளிலும் விமர்சையாக கொண்டாட ப்படுகிறது.
தமிழகத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் கோவை, கன்னியாகுமாரி மாவட்டம், சென்னை உள்பட பல்வேறு பகுதியிலும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று மகாபலி பாதாள உலகிலிருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாகக் கேரள மக்கள் நம்புகிறார்கள் இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
ஓணம் பண்டிகையின் சிறப்பு என்று சொல்ல வேண்டுமானால் அதில் அத்தப்பூக்கோலம், ஓண சாத்யா, நேரியல் புடவை, யானை ஊர்வலம் இடம் பெரும். இந்த ஆண்டு வருகிற 14-ந்தேதி ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஓணம் கொண்டாட்டங்கள் களைகட்டுகின்றன.
அத்தப்பூக்கோலம்:
ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் “அத்தப்பூ” என்ற பூக்கோலம் ஆகும்.தும்பை, காக்கப்பூ, தேச்சிப்பூ, முக்குட்டி, செம்பருத்தி, கொங்கினிப்பூ, அனுமன் கிரீடம், சேதிப்பூ ஆகியவற்றால் கோலத்தை அலங்கரிப்பர். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும். அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவைப் பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதைத்தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர்.
முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.
நேரியல் புடவை:
கேரள இளம்பெண்கள் ஓணம் பண்டிகை தினத்தன்று தங்கள் பாரம்பரிய உடையான தங்கநிற ஜரிகையுடன் கூடிய இளம்மஞ்சள் நிற புத்தாடை அணிந்து பண்டிகையை கொண்டாடுவர். கேரள பாரம்பரிய உடையான சந்தன நிற சரிகைக் கைத்தறிப் புடவைகள் கேரளாவின் பாலராமபுரத்திலிருந்து தயாராகி உலகம் முழுதும் விற்பனையாகத் தொடங்கின. இந்த வெண்மை நிற ஆடை, மக்கள் தங்கள் இதயத்தை தூய்மையாக வைத்திருப்பதை உணர்த்தக் கூடிய வகையில் உடுத்தப்படுவதாகும்.
ஓண சாத்யா:
கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான “ஓண சாத்யா” என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்குப் படைக்கப்படும்.
யானை ஊர்வலம், படகுப் போட்டி:
ஐந்தாம் நாள் ‘அனுஷம்‘ எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. ஆறு, ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாம் நாட்களில் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் நட்சத்திரங்களில் ஓண ஊஞ்சல் ஆடுதல், கோலமிடுதல் என ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.
10-ம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும், பூ தோரணங்களாலும் அலங்கரித்து அணிவித்து வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வருவார்கள்.