டில்லி:
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும் உத்தரவில் திருத்தம் செய்ய கோரிக்கை வைத்து மேல்முறையீட்டு மனுவை கர்நாடக அரசு நேற்று தாக்கல் செய்தது. அந்த வழக்கு இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை, கர்நாடக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் மதுசூதன் நாயக், அரசு வக்கீல்கள் ரகுபதி, மோகன் கத்தார்கி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சுப்ரீம் கோர்ட்டின் பதிவாளர் வீட்டுக்கு சென்று அவரிடம், 5–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரும் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு உடனடியாக, அதாவது ஞாயிற்றுக்கிழமை விசாரிக்க வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
கர்நாடக அரசு வக்கீல்கள் நேற்று காலை சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரை சந்தித்து, திருத்தம் கோரும் மனுவை நேற்றே விசாரணைக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆனால், அந்த மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதி, திங்கட்கிழமை காலை 10.30 மணி அளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து இன்று காலை கர்நாடக மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த செப்., 5ம் தேதி சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்.தமிழக அரசின் ஆதங்கம் உண்மை இல்லை எனக்கூறினார்.
அப்போது நீதிபதி தீபக் மிஸ்ரா, சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்தாத கர்நாடக மாநில அரசின் செயல் குறித்து அதிருப்தி தெரிவித்தது. மேலும், கோர்ட் உத்தரவு பிறப்பித்தவுடன், அதை அமல்படுத்த வேண்டும் அல்லது மேல்முறையீடு செய்ய வேண்டும். சட்டத்தை மக்கள் தங்கள் கைகளில் எடுக்கக்கூடாது.
எங்கள் உத்தரவை கர்நாடகா அரசு செயல்படுத்தவில்லை எனக்கூறினார். மேலும், இந்த இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவுக்கு ஏற்றதல்ல என்று கூறி, கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் தமிழக அரசு 12 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும். கர்நாடக அரசின் வாதங்களை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், காவிரி நீரை கர்நாடக அரசு கால்வாய்கள் வழியாக திறந்து விடுவதால், தண்ணீர் தமிழகத்தை வந்தடைய காலதாமதமாகும். முழுமையான தண்ணீர் தமிழகத்தை வந்தடையாது.
எனவே, காவிரி தண்ணீரை ஆற்றின் மூலம் திறந்து விட்டால்தான் தமிழகத்துக்கு விரைவாக வந்து சேரும் என்றும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்து விட வேண்டும். காவிரி விவகாரத்தில், கர்நாடக அரசின் வாதத்தை நிராகரிக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.