காஷ்மீர்:
முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் கமாண்டர் புர்கான் வானி கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி பாதுகாப்பு படையினரால்  சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து காஷ்மீரில் 3 மாதமாக தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
அங்கு அமைதியை நிலை நாட்ட உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் 20 அரசியல் கட்சிகளின் 26 எம்.பி.க்கள் அடங்கிய குழு காஷ்மீர் சென்று 2 நாட்கள் பார்வையிட்டு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தது. அப்போது பிரிவினைவாத தலைவர்களை சந்திக்க முயன்றனர். ஆனால் பிரிவினைவாதிகள் அவர்களை சந்திக்க மறுத்து விட்டனர்.

இது பிரதமர் மோடியை கோபம் அடையச் செய்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் காஷ்மீர் பிரிவினைவாதிகளிடம் கடுமையான அணுகுமுறையை கடைப்பிடிக்கும் நேரம் வந்து விட்டதாக உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிடம் மோடி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து முதல் கட்டமாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை விலக்கி கொள்ளவும், பல்வேறு சலுகைகளை ரத்து செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள நிலுவை வழக்குகளை மீண்டும் விசாரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இது தவிர பிரிவினைவாத தலைவர்களுக்கு வெளிநாடுகள் பண உதவி செய்வதை தடுக்கவும் அவர்களின் வெளி நாட்டு பயணங்களை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களின் விசாக்களை திரும்ப பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் காஷ்மீர் நிலவரம் குறித்து ராஜ்நாத்சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் இன்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் ஒவ்வொரு கட்சியின் உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. இதை ராஜ்நாத் சிங் தெரிவித்தார். காஷ்மீரில் ராணுவ சிறப்பு படையை விலக்கி கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
காஷ்மீரில் தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுப்பது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது. காஷ்மீர் நிலவரத்தை சமாளிக்க மாநில அரசு தவறி விட்டதாகவும் அனைத்து கட்சி கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று மாலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசுகிறார்.
காஷ்மீரில் நடைபெற்று வரும் வன்முறையில் இதுவரை 75க்கும் மேற்பட்டோர்  பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
1rajr
பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிடுபவர்களை சந்திக்க தேவையில்லை
இதற்கிடையில் ராஜ்நாத் சிங்கை இஸ்லாமிய மத குருமார்கள் குழு ஒன்று  தலைநகர் டெல்லியில் இன்று சந்தித்து பேசினர்.  சந்திப்புக்கு பிறகு  கரிப் நவாப் என்ற  அமைப்பின் தலைவர் மவுலானா அன்சார் ரஸா  கூறியதாவது:
உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை நாங்கள்  சந்தித்தோம்.  அப்போது  காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினோம். நம்முடைய உள்துறை மந்திரி நிச்சயம் இந்த பிரச்சனையை தீர்ப்பார் என்று உறுதியாக கூறுகிறோம் என்றனர்.
மேலும் ஒருசிலர் காஷ்மீரில்  பிரிவினைவாதிகளை சந்தித்தனர். அவர்கள் அப்படி செய்திருக்க கூடாது. ராஜ்நாத் சிங்கின் வழிகாட்டுதல்களை அவர்கள் பின்பற்றி இருக்க வேண்டும்.காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. அது அப்படியே தான் நீடித்திருக்கும். இந்தியா வாழ்க என்று முழக்கமிடுபவர்களுடன் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பாகிஸ்தான் வாழ்க என்பவர்களிடம் பேச்சு நடத்த தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.