சென்னை:
விநாயகர் சதுர்த்திக்காக சென்னையில் 5001 விநாயகர் சிலைகள் பல பகுதிகளில் வைக்கப்படும் என்றும், பிறகு இவற்றை கடலில் கரைக்கச் செல்லும்போது, மசூதி உட்பட மாற்று மத வழிபாட்டு தலங்கள் இருக்கும் பாதையில் ஊர்வலம் செல்லப்போவதாகவும் இந்து முன்னணி அறிவித்துள்ளது.
இந்து முன்னணி அமைப்பின் சென்னை மாவட்ட செயலாளர் இளங்கோவன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “சென்னை முழுதும் 5001 இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட இருக்கிறோம். இந்த சிலைகள் அனைத்தும் வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் ஊர்வலாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.
இந்த இரு நாட்களும் பிரம்மாண்டமான ஊர்வலத்தை நடத்த இருக்கிறோம். இந்த ஊர்வலம், மசூதி உள்ளிட்ட பிற மத வழிபாட்டுதலங்கள் இருக்கும் வழிகளில் செல்ல காவல்துறையினர் வழக்கம்போல தடை விதித்துள்ளனர்.

இந்தத்டையை மீறி, மாற்றுமத வழிபாட்டுத்தலங்கள் உள்ள சாலை வழியே எங்களது ஊர்வலம் செல்லும்” என்று தெரிவித்தார்.
இந்து முன்னணி மாநில அமைப்பாளரான ராம.கோபாலன், சென்னை திருவல்லிக்கேணி மசூதி வழியாக ஆண்டுதோறும் தனது அமைப்பினருடன் ஊர்வலமாக செல்ல திட்டமிடுவார். காவல்துறையினர் ஊர்வலத்தை தடுத்து மாற்றுப்பாதையில் அனுமதிப்பார்கள். மேலும் இந்து முன்னணியினர் 5001 இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்போவதாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் காவல்துறையினர் 2500 இடங்களில் சிலை வைக்க மட்டுமே அனுமதி அளித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் பாதுகாப்பு
விநாயகர் ஊர்வலம் நடக்க இருக்கும் 10,11 தேதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளனர். சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் அதிக எண்ணிக்கையில் கரைக்கப்படும். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. ஊர்வலம் நடைபெறும் இரு நாட்களும் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள்.
Patrikai.com official YouTube Channel