சென்னை: அம்மா உணவக நிர்வாகத்தில் விதிமுறைகளை சரிவர பின்பற்றாததால், தமிழகஅரசுக்கு ரூ.5.69 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய மாநில அரசுகளின் திட்ட செலவுகள் குறித்து இந்திய ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை அளிப்பது வழக்கம். இதில் மாநில அரசின் திட்டங்கள் குறித்த அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்மா உணவகத்தில் நடக்கும் முறைகேடு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களில் உள்ள அம்மா உணவகங்களில் 4 லட்சம் சப்பாத்தி தயாரிக்கும் திறன் கொண்ட எந்திரங்கள் வாங்கப்பட்டதாகவும், அப்போது, அதன் தரம் பரிசோதித்து பார்க்கப்படவில்லை என்றும் சி.ஏ.ஜி. அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
மாநகராட்சி டெக்னிக்கல் ஆய்வு கமிட்டியும், அந்த எந்திரம் தரமில்லை என 2013ல் சுட்டி காட்டியுள்ளது. ஆனால் அதற்குள்ளாக கான்டிராக்டருக்கு ரூ.1.33 கோடியை சென்னை மாநகராட்சி வழங்கிவிட்டது.
இதுகுறித்து கான்டிராக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டபோது, “மூன்று மாதங்களுக்குள் எந்திரத்தை சீர் செய்து தருகிறோம் அல்லது பணத்தை திருப்பி தருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை இரண்டுமே நடக்கவில்லை. அந்த கான்டிராக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சப்பாத்தி எந்திரங்களுக்கு வாரண்டி தர வேண்டும் என்ற நிபந்தனையை கூட மாநகராட்சி விதிக்கவில்லை.
பழுதடைந்த மிஷினை வைத்து, அதை ரிப்பேர் பார்ப்பதிலேயே செலவு அதிகரித்துள்ளது. இதனால் அரசு கருவூலத்திற்கு ரூ.5.69 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என்று சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவித்துள்ளது.