டில்லி:
முகேஷ் அம்பானி தனது ஜிஜோ அறிமுக விளம்பரத்தில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றிருந்தது. இது சட்டப்படி சரியா? என கேள்வி எழுந்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் தனது ரிலையன்ஸ் ஜியோ 4ஜி திட்டத்தின் தொடக்க விழாவுக்கு அனைத்து நாளிதழ்களிலும் ஒரு பக்க அளவு விளம்பரத்தைப் போட்டு அமர்க்களப்படுத்தியிருந்தது. அந்த விளம்பரத்தின் அதிமுக்கிய அம்சம் என்னவென்றல், நீல கலர் ஜாக்கெட்டுடன் புன்னகைத்தபடி பிரதமர் மோடி அதில் போஸ் கொடுத்திருந்ததுதான்.
அவ்வளவுதான் ரிலையன்ஸ் ஜியோ 4ஜியின் வேகத்தைவிட அதிகமான வேகத்தில் விமர்ச்சனங்கள் சமூகவலைதளங்களில் பரவத் துவங்கிவிட்டன.
அரசின் சின்னங்களையும், அரசு நிர்வாகிகளின் பெயர்களையும் தவறாகப் பயன்படுத்துவதை தடை செய்யும் Emblems And Names (Prevention Of Improper Use) Act, 1950 படி யாரும் வியாபார நோக்கத்துக்காக அரசு நிர்வாகிகளின் பெயரையோ, அரசின் சின்னங்களையோ பயன்படுத்தக்கூடாது. ஆனால் ரிலையன்ஸ் அந்த சட்டத்தை மீறியிருப்பதாக வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தனியார் விளம்பரத்தில் இந்திய பிரதமர் மோடி படம் இடம் பெற்றிருப்பது, அந்த நிறுவனத்துக்கு பிரதமர் ஆதரவானவர் என்ற தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. மேலும் மோடி ரிலையன்ஸ்சின் பங்குதாரரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கேற்றார்போல் எந்த ஊடகத்திற்கும் பேட்டி கொடுக்காத பிரதமர் ரிலையன்சின், நெட்வொர்க் 18-ல் தமது பேட்டி இடம்பெறப்போவதாக தமது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மாண்ட்ப்ளாங்க் என்ற பேனா நிறுவனம் தனது விளம்பரத்தில் மகாத்மா காந்தியின் படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
இதில் ஒரு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் அரசின் தொழிலாளர் நல விரோதப் போக்கைக் கண்டித்து ஒருநாள் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்த அதே நாளில் பெருமுதலாளி அம்பானியின் மாடல் போல பிரதமர் ரிலையன்ஸ் விளம்பரத்தில் போஸ் கொடுத்திருப்பது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதைப்போல இருப்பதாக விமர்ச்சனங்கள் எழுந்துள்ளன.