சர்வதேச ப்ரோக்ராம்மிங் ஒலிம்பியாடில் 3 முறை பதக்கம் வென்ற சாதனை மாணவியை பாரம்பரிய முறையில் கல்வி கற்று 10 மற்றும் +2 தேர்வுகள் எழுதவில்லை என்ற ஒரே காரணத்துக்காக ஐஐடி புறக்கணித்துள்ளது. அதே நேரத்தில் ” இந்த குட்டி ஜீனியஸை நாங்களே ஸ்காலர்ஷிப் கொடுத்து படிக்க வைக்கிறோம் என்று ஒரு அமெரிக்கப் பல்கலைக்கழகம் இருகரம் நீட்டி அழைத்துள்ளது”.
மும்பையில் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி மாளவிகா ஜோஷி. இவரது பள்ளிப் படிப்பை 7-ஆம் வகுப்புடன் அவரது அம்மா நிறுத்திவிட்டார். அதற்குக் காரணம் வெறும் பாரம்பரிய பள்ளிப்படிப்பு மகளுக்கு அறிவை வளர்க்காது. மகிழ்ச்சியையும் தராது என்பது அவரது கருத்து. எனவே தனது மகள் மாளவிகாவை மகிழ்ச்சியான வீட்டுச் சூழலில் வைத்து படிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டார். மாளாவிகாவுக்கென ஒரு தனி பாடத்திட்டத்தையே அவரது அம்மா தயாரித்துவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவரும் எதிர்பார்த்தபடியே வீட்டுக்கல்வியை ஆரம்பித்தவுடன் மாளவிகாவிடம் மகிழ்ச்சி ஒட்டிக்கொண்டது.
அம்மா எதிர்பார்த்ததை விட சமர்த்தாகப் படித்த மாளவிகா தனக்கு விருப்பப் பாடமாக ப்ரோக்ராம்மிங் துறையைத் தேர்ந்தெடுத்தார். இவரது அறிவுத்திறனைக் கண்டு சென்னை கணிதவியல் கழகம் அவருக்கு முதுகலைக் கல்வி படிக்க வாய்ப்பளித்தது. அப்போதுதான் மாளவிகா சர்வதேச ப்ரோக்ராம்மிங் ஒலிம்பியாடில் பங்கேற்று 3 முறை பதக்கம் வென்று சாதித்துக் காட்டினார்.
மாளவிகாவின் குறிக்கோள் ஐஐடியில் சேர்ந்து பயில்வது. ஆனால் அவர் 10 மற்றும் +12 தேர்வுகள் எழுதவில்லை என்பதை காரணம் காட்டி ஐஐடி அவரது விண்ணப்பத்தை புறக்கணித்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவின் போஸ்டனில் உள்ள மசாச்சுசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி ஸ்காலர்ஷிப்புடன் படிக்கும் வசதியை ஏற்படுத்திக்க் கொடுத்து மாளவிகாவை அழைக்கிறது. ஆனாலும் தனது மனம் இன்னும் ஐஐடியையே சுற்றி வருவதாக மாளவிகா தெரிவித்திருக்கிறார்.
உப்புசப்பில்லாத சொத்தைக் காரணங்களைக் காட்டி மாஸ்டர் மூளைகளை அலட்சியம் செய்யும் போக்கை இந்திய அரசு கல்வி நிறுவனங்கள் மாற்றிக் கொள்ளவேண்டும். இல்லாத பட்சத்தில் மாளவிகா போன்ற பல்வேறு சாதனையாளர்களை நாடு இழக்க நேரிடும்