காதலர்கள் தங்களுக்குள் செல்லமாக கடித்துக் கொள்வதை வெளிநாடுகளில் ஹிக்கி (லவ்-பைட்) என்று அழைப்பார்கள். அன்பு மிகுதியால் ஒருவரையொருவர் கழுத்தில் கடித்து வைத்துக்கொள்வதே ஹிக்கி ஆகும். இது அரிதாக சில நேரங்களில் விபரீதத்தில் முடிவது உண்டு. சமீபத்தில் மெக்ஸிகோவில் இந்த காதல்கடி ஒரு இளைஞரின் உயிரைக் காவு வாங்கியுள்ளது. கடித்த காதலி தலைமறைவாகியுள்ளார்.

ஜூலியோ மகியாஸ் கான்சலெஸ் என்ற 17 வயது இளைஞன் தனது காதலியை தம் வீட்டுக்கு ஒரு மாலை விருந்துக்கு அழைத்திருந்தார். குடும்ப சகிதமாக அனைவரும் விருந்துண்டபின் திடீரென்று ஜூலியோவை வலிப்பு நோய் தாக்கவே அவனை அவசரவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு அவனுக்கு ஹிக்கியின்(காதல் கடி) விளைவாக இரத்த உறைதல் ஏற்பட்டு வலிப்பு தாக்கியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அங்கு அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
ஜூலியோவின் பெற்றோர் தங்கள் மகனின் மரணத்துக்கு அவன் காதலிதான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். 24 வயதான அந்தப் பெண் இப்போது தலைமறைவாகிவிட்டார்.
ஹிக்கி எனப்படும் காதல்கடி உயிரை வாங்கும் அளாவுக்கு பாதிப்பை உண்டுபண்ணுவது அரிதுதான் என்றாலும் 2011-ஆம் ஆண்டு நியூசிலாந்தில் ஹிக்கி ஒரு 44 வயது பெண்ணின் உயிரை வாங்கியது. அவரும் இதுபோலவே வலிப்பு நோய் தாக்கி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கழுத்துப் பகுதியில் ஏற்படும் இரத்த உறைவு இரத்த நாளங்களில் அடைப்பை உண்டு பண்ணுவதால் மரணம் நேரிடுவதாக மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Patrikai.com official YouTube Channel