மதுரை:
தமிழகத்தை சேர்ந்த பெண் எம்பி சசிகலாபுஷ்பா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு முதன்முறையாக தமிழகம் வந்துள்ளார். இன்று மாலை மதுரை ஐகோர்ட்டில் ஆஜராவதற்கு தயாராக வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.
இன்று மாலை 4 மணிக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் விசாரணைக்கு வருகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பின்னர் முதல் முறையாக தமிழகத்தில் காலடி வைத்துள்ளார் சசிகலா புஷ்பா. ஆனால் தமக்கு எதுவும் நேரலாம் என்ற சூழ்நிலையை எதிர்கொள்ள கூடிய துணிச்சலோடுதான் அவர் விமான நிலையத்தில் வந்திறங்கியதை பார்க்க முடிந்தது.
ஜெயலலிதா தம்மை அடித்தார் என்று ராஜ்யசபாவில் கதறிய பின்னர் தமிழகத்துக்குள் கால் வைக்கவே இல்லை சசிகலா புஷ்பா. ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் தமக்கு முன்ஜாமீனை வாங்கிவிட்டுத்தான் தமிழகத்துக்குள் நுழைவேன் என கூறிவந்தார் சசிகலா புஷ்பா.
ஆனால் மதுரை உயர்நீதிமன்றமோ, போலி முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருக்கிறீர்கள்.. அதனால் நேரில் ஆஜராக வேண்டும் என்று சசிகலா புஷ்பாவுக்கு உத்தரவிட்டது….இதனால் அவர் உச்சநீதிமன்றத்துக்கு போனார்..
ஒருவழியாக உச்சநீதிமன்றம் சசிகலா புஷ்பாவை கைது செய்ய 6 வாரங்களுக்கு தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராகவும் உத்தரவிட்டது. ஆனாலும் தமிழகம் வரும் சசிகலா புஷ்பா புதிய புகாரில் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார் சசிகலா புஷ்பா. எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் தைரியமாகத்தான் அவர் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடமும் கூட ஆணித்தரமாகவும் அதே நேரத்தில் நிதானமாகவும் தம்முடைய கருத்துகளை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து, முன் ஜாமீன் கோரிய வழக்கில் உயர்நீதி மன்றக்கிளையில் ஆஜர் ஆவதற்காக மதுரை வந்த சசிகலா புஷ்பா எம்.பி அங்குள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருக்கிறார். அங்கே மூத்த வழக்கறிஞர்கள் அஜ்மல்கான், சுபாஷ்பாபு ஆகியோருடன் வழக்கை எதிர்கொள்வது எப்படி என்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.