சென்னை:
மருத்துவ படிப்புக்கான சீட் மோசடி வழக்கில் பச்சமுத்து கைது செய்யப்பட்ட அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. ஏனென்றால், இந்திய அளவில் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரும், மத்திய பாஜக அரசுக்கு நெருக்கமானவருமான பச்சமுத்துவை விசாரணைக்கு அழைப்பார்கள் என்றே யாரும் நினைக்கவில்லை.
இந்த நிலையில் கைதும் செய்யப்பட்டிருப்பது ஆச்சரியம்தானே!
தவிர, நேற்று முன்தினம், அவரை விசாரணைக்காக சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு வரச்சொன்னார்கள் காவல் அதிகாரிகள். விசாரணை முடிந்த பிறகு, அவர் உறங்கியவிதத்தைக் கண்டு, உடனிருந்த அவரது கல்லூரி அதிகாரிகள் கலங்கிப்போய்விட்டார்களாம்.
“கையே தலையணை, கட்டாந்தரையே பஞ்சுமெத்தை” என்று ஒரு கிராமிய பாடல் உள்ளது அல்லவா.. கிட்டதட்ட அந்த நிலைதான் பாரிவேந்தர் என்கிற பச்சமுத்துவுக்கு!
அவரது சொத்து மதிப்பு கிட்டதட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய் என்கிறார்கள். ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்திருக்கும் பெரும் பங்களா, விதவிதமான நவீன கார்கள், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் வேலையாட்கள், பெரும் வணிக, கல்வி நிறுவனங்கள், ஒரு கட்சியின் தலைவர்.. என்று வாழ்பவர் அவர்.
ஆனால், நேற்று முன்தினம் விசாரணை முடிந்த பிறகு, பச்சமுத்து படுப்பதற்கு ஒரு மர பெஞ்சை கைகாட்டியிருக்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.
ஆம்.. விசாரணை அறையில் உள்ள… காவலர்கள் அமரும் மரப்பெஞ்சுதான் பச்சமுத்து படுக்க ஒதுக்கப்பட்டது. விசாரணை செய்யப்பட்ட களைப்பு, மன உளைச்சல், அசதி.. இவற்றை தாண்டி, உறவக்கம் வரவில்லை அவருக்கு. புரண்டு படுக்கவும் வழியில்லை.
அப்போது அவரது கல்லூரி நிர்வாகிகள், “ஒரு தலையணையாவது வைத்துக்கொள்ள அனுமதி கொடுங்கள்” என்று கேட்டுக்கொள்ள.. அதற்கு மட்டும் அனுமதித்திருக்கிறார்கள் காவல் அதிகாரிகள். இரவு முழுதும் பாதுகாப்புக்காக அருகிலேயே ஒரு காவலரும் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்.
அந்த விசாரணை இரவு, உறங்காப் பொழுதாகவே கழிந்தது பச்சமுத்துவுக்கு.
விடிந்ததும், காவல்துறை உயர் அதிகாரிகள் அறையில் பல் துலக்கினார் அவர். பிறகு, பக்கத்தில் இருக்கும் நாயர் கடையிலிருந்து டீவாங்கி தரப்பட்டது.
.பிறகு, அருகில் இருக்கும் ஓட்டலில் இருந்து காலை உணவு வாங்கிவந்து தரப்பட.. பொட்டலத்தைப் பிரித்து மெல்ல சாப்பிட்டிருக்கிறார் பச்சமுத்து. அப்போது அவர், “இந்த பொட்டல சாப்பாட்டில் இருந்துதான் என் வாழ்க்கை துவங்கியது” என்றாராம் விரக்தி புன்னகையுடன். .