சென்னை:
மருத்துவ கல்லூரியில் இடம் தருவதாக கூறி ரூ.72 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன தலைவர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தர், சிறையில் அடைக்கப்பட மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரான மதன், சில மாதங்களுக்கு முன்பு மாயமானார். அவர் எழுதியதாக வெளியான கடிதத்தில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக கூறி 102 மாணவர்களிடம் பெற்ற ரூ. 72 கோடி பணத்தை பச்சமுத்துவிடம் ஒப்படைத்து விட்டதாகவும், பணம் கொடுத்த மாணவர்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பணம் கொடுத்து ஏமாந்த பெற்றோர்கள், போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று பச்சமுத்துவுக்கு குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இதையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேற்று மாலை பச்சமுத்து வந்தார். அவரிடம் விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர்.
சுமார் 15 மணிநேரங்களுக்கு மேலாக நடந்த விசாரணையின் முடிவில் பச்சமுத்து கைது செய்யப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து உடல் நல பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பச்சமுத்து அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் தனக்கு நெஞ்சு வலி இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் சில உடல் உபாதைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தாராம்.
இந்த நிலையில், பச்சமுத்துவை சிறையில் அடைக்காமல், மருத்துவமனையிலேயே வைத்திருக்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.