சென்னை:
டையாறு ஆற்று பாலத்தின் ஓரமாக இருந்த போஸ்டில் மோதி மாநகர பஸ் விபத்துக்குள்ளானது.  பஸ்சில் பயணம் செய்த 50க்கும்  மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.
இன்று காலை வழக்கம்போல  பூந்தமல்லியில் இருந்து மந்தைவெளி நோக்கி 54F மாநகர பேருந்து வந்து கொண்டிருந்தது.  சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் பயணம் செய்தனர்.
சாதாரணமாக வந்துகொண்டிருந்த பஸ், நந்தம்பாக்கம் அடையாறு ஆற்றுப்பாலத்தில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுபாட்டை மீறி சென்றது. இதனால் பஸ்சினுள் இருந்த பயணிகள் அலறினர்.  பஸ்சுக்கு முன்னால்  சென்ற  மூன்று சக்கர சைக்கிள் மீது மோதியது. அதையடுத்து அருகே சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது அடுத்தடுத்து மோதி,  பக்கவாட்டில் இருந்த இரும்பு தடுப்பில் பலத்த சத்தத்துடன் இடித்துவிட்டு, அருகிலிருந்து  கம்பத்தில் மோதி நின்றது.  இன்னும் கொஞ்சம் வேகமாக போய் மோதியிருந்தால் பஸ் அடையாறு ஆற்றுக்குள் விழுந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
bus accident
இதனால்  அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்து கொண்டு  கீழே இறங்கினர். சிலர் ஜன்னல் வழியாக கீழே குதித்தனர். பஸ் விபத்துக்குள்ளானதும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பஸ் மோதியதில் பலத்த காயம் அடைந்த மாற்றுத்திறனாளி ராஜேந்திரன் மற்றும் வாலிபருக்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரங்கிமலை போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து கிரேன் மூலம் பஸ்சை அப்புறப்படுத்தினர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது.
பஸ் விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்து காவல்துறையினரும், மாநகர பேருந்து அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.