லிம்பிக்கில் இருந்து திரும்பிய மாரத்தான் தடகள வீராங்கணை ஓபி ஜெய்ஷா தொலைக்காட்சியில் தனது ஆதங்கங்களைக் கொட்டித் தீர்த்தார்.
fainted jeisha
மாரத்தானில் ஓடும்போது இந்திய வீரர்களுக்குத் தண்ணீர், குளுக்கோஸ் தர வேண்டும் என்பதுகூட இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்குத் தெரியாதா? என்று கேட்கிறார். 42 கிமீ தூர மாரத்தானில் குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் ’ஒருகட்டத்தில் செத்துப்போவேனோ’ என்றே நினைத்ததாக உயிர் பிழைத்து வந்துள்ள அவர் கூறுவதைக் கேட்டுக்கொண்டும் வாளா விருக்கிறோம்.
எல்லைக் கோடுவரை வெறிபிடித்து ஓடிவந்துள்ள ஜெய்ஷா எல்லைக்கோட்டைத் தொட்டதும் மயங்கிவிழுந்தார். மூன்று மணி நேரம் மயக்கம் தெளியவில்லை. ஏழு பாட்டில்கள் குளுக்கோஸ் ஏற்றப்பட்டிருக்கிறது. இந்திய ஒலிம்பிக் சங்கம் இப்போதும் முட்டையில் மயிர் பிடுங்கும் வேலையில் பிசியாக இருந்துள்ளது.
கர்னாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓபி ஜெய்ஷா ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். ஏழ்மை என்றால் ஒருவேளைச் சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் மண்ணைக்கூட தின்று வயிறு நிறைத்தவர். அப்படியானால் அவரது மனோதிடம் எப்படி என்பதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த மனோதிடம்தான் அவரை ஒலிம்பிக்வரை கொண்டு வந்து நிறுத்தியது. அவரது மனோதிடத்தையும் திறமையையும் பதங்கங்களாக மாற்ற வேண்டிய தடகள சங்கமும் இந்திய ஒலிம்பிக் சங்கமும் மற்றும் தொப்பை பெருத்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அவரை நாக்குத் தள்ள ஓடவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.
உலகில் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற அராஜகங்கள் சாத்தியமில்லை. பதக்கங்களை அள்ளிக்குவித்துள்ள நாடுகளில் இப்புகார் எழுந்து, அதற்கான முகாந்திரம் இருப்பதாகத் தெரிந்தாலே அந்நாட்டின் தடகள சங்கம், ஒலிம்பிக் சங்கங்கள் கலைக்கப்பட்டிருக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பந்தாடப்பட்டிருப்பார்கள். ஆனால், ஊழல் மலிந்த இந்தியாவில் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், பொறுப்பில் இருப்பவர்கள் ஆதிக்கசக்திகளும், ஆளும்சக்திகளும்தான்.
விளையாட்டுத்துறைக்கு என்று தனி அமைச்சகம் தேவை என்ற அறிவே 200க்குப் பிறகுதான் உருவாகியுள்ளது. அதற்கு முன்பு பெயரளவுக்கானதாகத்தான் இருந்தது. 1980களில் ஆசியன் கேம்ஸ் நடந்தபோதுதான் மானத்தைக் காப்பாற்ற அவசரமாக இதுபோன்ற நிர்வாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதுவும் இளைஞர்கள் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை என்ற பெயரில் இருதுறைகள் இணைக்கப்பட்ட அமைச்சகமாகத்தான் உருவாக்கப்பட்டது. 2008ல்தான் விளையாட்டுத் துறை தனியாகப் பிரிக்கப்பட்டு தனி அரசு செயலர் நியமிக்கப்பட்டார். இதன் நோக்கம் நாட்டில் உள்ள விளையாட்டுத் திறன்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவதும் மேம்படுத்துவதும். இதற்காக இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய ஒலிம்பிக் சங்கம், மாநில ஒலிம்பிக் சங்கங்கள் மட்டுமல்லாம அந்தந்த விளையாட்டுகளுக்கான இந்திய அளவிலான பெடரேசன்கள், மாநில அளவிலான சங்கங்கள் மட்டுமல்லாமல் தழிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் மாநில விளையாட்டு ஆணையங்கள் எல்லாம் இருக்கின்றன.
இவ்வளவையும் பார்க்கும் போது ’அடடா, அரசு நன்னாத்தான் ஊக்கமளிக்குது, ஆனால், திறமையா வெளையாடறவாதான் இல்ல’ என்று சொல்லலாம். அவர்கள் உப்பரிகைகளில் மட்டும் வாழ்க்கையைக் கழிப்பவர்களாகத்தான் இருப்பார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை, மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சி என்பது ஏதாவது விளையாட்டில் மாவட்ட, மாநில, இந்திய அளவில் சாதனைகள் புரிந்து உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான ஒதுக்கீட்டில் ஒரு வாய்ப்பைப் பெறுவதற்கான பெரும்போட்டியில் நிராயுதபாணிகளாக இறக்கிவிடப்பட்டுள்ளனர் என்பதைத் தவிர ஒன்றுமில்லை.
ஏராளமான பள்ளிகளில் விளையாட்டுத் துறைக்கான அறைகள் பழைய பொருட்கள் போட்டு வைக்கும் இடமாக மாறியுள்ளது. அது பெருச்சாளிகள் விளையாடும் களமாக இருக்கும் அவலங்கள் பல பள்ளிகளில் உள்ளன. அதிலும் குறிப்பாக கிராமப்புறம் மற்றும் நகரங்களில் ஏழை மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் நிலைமை இன்னும் மோசம். விளையாட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை, விளையாட்டுப் பொருள்கள், உபகரணங்கள் இருப்பதில்லை.
நன்றாகக் கவனியுங்கள்; தனிநபர் விளையாட்டுகளில் சாதனை புரிந்தவர்கள் கருப்பர்கள், பழுப்பர்கள், உழைப்பாளர் வீட்டுப்பிள்ளைகள். அதாவது ஏழைகள். பொருளாதரம், சமூக ரீதியில் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஜெய்ஷா மட்டுமல்ல, புதுக்கோட்டை சாந்தி போன்ற ஏராளமானவர்கள் ஏழைவீட்டுப் பிள்ளைகள்தான். இவர்கள்தான் தங்கள் விடாமுயற்சியால் போராடி தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.
theree champians
கடந்த சில ஒலிம்பிக்குகளில் இந்தியா சில பதக்கங்களை வென்றிருந்தாலும் அவையும் தனிப்பட்ட வீரர்களின் முயற்சியால்தான். அரசோ, விளையாட்டுச் சங்கங்களோ இதற்குப் பெருமைகொள்ள இயலாத வெட்ககரமான நிலைமைதான் இருக்கிறது.
உதாரணமாக, பேட்மிட்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி வி சிந்து இப்பிரிவில் பதக்கம் பெறும் இரண்டாவது இந்தியர். சிந்துவின் வெற்றிக்குக் காரணம் அவரது பயிற்சியாளர் கோபிசந்த்தான் என்பதை நாடே அறியும்.
ஒலிம்பிக் வரலாற்றில் பெண்கள் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் சாக்‌ஷி மல்லிக். ஹரியானா மாநிலம் மொஹ்ரா என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் மல்யுத்தப் பயிற்சி பெறுவதற்கு உறவினர்களும் கிராமமும் கடுமையாக எதிர்த்தது. ஆனால் அதையெல்லாம் எதிர்த்து நின்று தனிப்பயிற்சியாளர் வைத்து முன்னேறியுள்ளார்.
இந்த இருவர் தவிர பெருமைப்படத்தக்க மற்றொருவர் தீபா கர்மாகர். ஒலிம்பிக் போட்டிகளின் ஹைலைட் ஜிம்னாஸ்டிக். இப்பிரிவில் இதுவரை இந்தியா கலந்துகொண்டதுகூட இல்லை. இப்பிரிவில் முதல்முறையாக இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார் தீபா. கடந்த 52 ஆண்டு களாக இப்பிரிவில் நுழைய இந்தியா முயன்றது. அனால், தீபாதான் இந்த வாய்ப்பினைப் பெற்றுத்தந்துள்ளார்.
அதுமட்டுமல்ல, இவர் பதக்கம் வெல்லாவிட்டாலும் இன்று உலகம் முழுவதும் இவரது திறமையைத்தான் பாராட்டுகிறது. ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் செய்யப்படும் ஒரு சாகசம் புரோதுனோவா. அந்தரத்தில் பறந்தபடி வால்ட் அடிப்பது. ஆனால், யாருமே இதை முயற்சித்துப் பார்ப்பதில்லை. சாத்தியமானால் அதிக புள்ளிகள். சரியாக வரவில்லையானால் பின்புறமாக விழுந்து முதுகெலும்பு இரண்டாகப் பிளக்கும் அபாயம். இதனால், இதுவரை இதனை முயற்சித்தவர்கள் நான்கே நான்குபேர்தான். தீபா ஐந்தாவதாக முயற்சித்து சாதித்துள்ளார். காலிறுதியில் வெண்கலப் பதக்கத்தை நூலிலையில் இழந்தாலும், இவரது சாதனைதான் ரியோ ஒலிம்பிக்கின் ஹை-லைட்டாகப் பேசப்படுகிறது.
மற்றொரு முக்கிய அம்சம் இந்த மூவருமே பெண் தங்கங்கள்!
ரியோ ஒலிம்பிக் முடிவுகளைப் பார்க்கும்போது இந்திய வீரர்களின் திறமை தெளிவாகப் பளிச்சிடுகிறது. ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட 179 இந்திய வீர/வீராங்கணைகளில் சுமார் 60 பேர் கடைசி இடங்களுக்கு முன்னேறியுள்ளனர்.
பேட் மிட்டனில் கிடம்பி ஸ்ரீகாந்த் கால் இறுதியில் வெற்றிவாய்ப்பை இழந்தார்.
ஜ்வாலா, அஸ்வின் பெண்கள் இணை நாக்அவுட் சுற்றைக் கடந்துள்ளனர்.
சாய்னா நெய்வால் லீக் சுற்றுகளைக் கடந்து முன்னேறியுள்ளார்.
மனு அட்ரி, சுமீத் ஆடவர் இணை நாக்அவுட்டில் வெளியேறியது.
மல்யுத்தத்தில் பபிதா குமாரி கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் வெளியேறினார்.
லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற யோகேஸ்வர் தத் தகுதிச் சுற்றில் தோல்வியடைந்தார்.
டென்னிஸில் சாய்னா மிர்ஜா – ரோஹன் போபண்ணா இணை வெண்கலத்தை இழந்தது.
துப்பாக்கி சுடுதலில் அபினவ் பிந்த்ரா நான்காவது இடம்வரை முன்னேறினார். ககன் நரங்க், மனவ்ஜித் சிங், கயன் சென்னை, குர்பீத் சிங், மைரஜ் அகமது கான், அபூர்வி சந்தெலா, ஹீனா சித்து ஆகியோர் இறுதிச்சுற்றின் விளிம்புவரை முன்னேறியுள்ளனர்.
லலிதா பபர் 10வது இடம் பெற்றார். சுதா சிங் இறுதிச்சுற்றில் வாய்ப்பிழந்தார். துடீ சந்த், ஸ்ரபானி நந்தா, நிர்மலா ஷெயோரன் , திண்டு லுகா, மன்பிரீத் கவுர், சீமா புனியா ஆகிய வீரங்கணைகள் இறுதிச்சுற்றில் வெளியேறியுள்ளனர்.
அதேபோல ஆடவர் தடகளத்தில் விகாஷ் கவுடா, ஜின்சன் ஜான்சன், அனஸ் யாஹியா, அங்கிட் ஷர்மா, ரஞ்சித் மஹேஸ்வரி. குர்மீத் சிங், மனீஷ் சிங், கணபதி கிருஷ்ணன் ஆகியோ இறுதிச்சுற்று வரை முன்னேறி தோற்றுள்ளனர்.
இந்திய ஆடவர் ஹாக்கி குழு கால் இறுதியில் தோற்றது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது. இன்னும் பல வீரர்கள் 20 முதல் 40 இடங்களுக்குள் வந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் தங்கள் விடாமுயற்சியால் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளனர். அவர்களின் திறனை முன்னுணர்ந்து பயிற்சிகளை அளித்திருந்தால் ஏற்கனவே பெற்ற இரண்டு பதக்கங்களோடு இன்னும் பல பதக்கங்கள் உறுதியாகச் சேர்ந்திருக்கும். இவர்களைக் கண்டெடுக்க வேண்டிய பொறுப்பு விளையாட்டு சங்கங்களுக்கு இருக்கிறது.
ஆனால், பதவியில் உள்ளவர்களுக்கும் வீரர்களுக்குமான உறவு ஆண்டான் – அடிமை உறவாகத்தான் இருக்கிறது. தங்களுக்கு விமானத்தில் பிசினஸ் கிளாஸ், வீரர்களுக்கு எக்கானாமிக் கிளாஸ். வீரர்கள் தாகத்தில் நாக்கு தள்ளினாலும் கவலையில்லை. தான் எஜமானன் என்ற எண்ணம் இவர்களுக்கு. ஏசி அறையில் பொழுதைக்கழிக்கும் தாங்கள் உயர்ந்தவர்கள். களத்தில் வியர்வை சிந்த உழைக்கும் வீரர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம்.
காரணம் விளையாட்டு பெடரேஷன்கள், சங்கங்கள் ஒன்றில்கூட விளையாட்டுத்துறை  சார்ந்தவர்கள் தலைவர்களாகவோ பொறுப்புகளிலோ இல்லை. வயிறு கொழுத்த அரசியல்வியாதிகளும் வியாபாரிகளும்தான் இருக்கிறார்கள். அதைவிட்டால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். இவர்கள் புத்தகப்புழுக்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் எத்தனைபேர் காலையில் எழுந்து கிரவுண்டுக்கு ஓடியிருப்பார்கள்?
மேலும் சிகப்புநாடா கட்டுப்பாடுகள், ஊழல், முறைகேடு, பாகுபாடு, பாலியல் இம்சைகள்… நிதி பற்றாக்குறை, நிதி ஊழல்கள்…
உண்மையில் இந்த விளையாட்டு சங்கங்களைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள்தான் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள். சாக்‌ஷி இந்தியா திரும்பியபோது விமான நிலையத்தில் அவரை இடித்துத் தள்ளிக்கொண்டு முன்னேறிய ஒரு உருவம் சாக்‌ஷியை மறைத்தபடி தொலைக்காட்சிகளுக்கு போஸ் கொடுத்ததைப் பார்த்திருப்போம். போகும்போது பிசினஸ் கிளாசில் தாங்கள் உயர்ந்தவர்கள் என்றுகாட்டிக்கொண்டவர்கள், யோரோ கடினமாக உழைத்துப் பதக்கம் வென்றால் அதற்கும் தாங்களே என முன்வந்து போஸ் கொடுப்பார்கள்.
மேலும், இப்போது பதக்கம் வென்ற பிறகு கோடி, கோடியாக அறிவிக்கிறார்கள். ஆனால், இளைஞர்களும் மாணவர்களும் பயிற்சியின்மையாலும் ஊக்கமின்மையாலும் போதுமான ஊட்டச்சத்து இல்லாததாலும் மாவட்ட அளவைத் தாண்டமுடியாமல் தவிக்கிறார்கள். இதை இவர்களுக்குச் செலவளித்திருந்தால் இன்னும் பலரது திறமை வெளியே தெரிந்திருக்கும்.
ஏதாவது ஒரு கிராமத்துக்கோ, நகரில் ஏழைகள் வசிக்கும் பகுதிக்கோ சென்று பாருங்கள். ஓராயிரம் தங்க மங்கைகளும் வீரர்களும் கிடைப்பார்கள்.  அவர்களைக் கண்டெடுங்கள்.
வீரர்கள் களத்தில் உருவாகிறார்கள், ஏ/சி அறைகளில் அல்ல. இந்திய விளையாட்டு சங்கங்களும் வாரியங்களும் ஆணையங்களும் இதை எப்போதுதான் உணருமோ?
கட்டுரையாளர் தொடர்புக்கு jeon08@gmail.com http://facebook.com/appsmoo )