டில்லி:
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக உள்ள ரகுராம் ராஜனின் பதவிக்காலம் அடுத்த மாதம், (செப்டம்பர்) நான்காம் தேதியுடன் நிறைவடைகிறது. ரகுராம் ராஜனும் மீண்டும் கவர்னராக பணியாற்ற விரும்பவில்லை என தெரிவித்துவிட்டார்.
இதனையடுத்து பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோர் ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னர் குறித்து ஆலோசனை நடத்தினர். ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் சுபிர் கோகர்ன், தற்போதைய துணை கவர்னர் உர்ஜித் படேல், தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோர் பெயர் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் தற்போதைய துணை கவர்னர் உர்ஜித் படேல் புதிய கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது

யார் இந்த உர்ஜித்?
52 வயதான உர்ஜித் பட்டேல், லண்டன் பல்கலையில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்சில் பி.ஏ., பட்டம் பெற்றவர். ஆக்ஸ்போர்டு பல்கலையில் வணிகத்தில் எம்.பில் முடித்தார். மேலும்யேல் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
உர்ஜித் பட்டேல் ஐ.எம்.எஃப் எனப்படும் உலக பன்னாட்டு நிதியத்தில் இந்திய நாட்டின் சார்பில் பணி புரிந்து உள்ளார். குஜராத் மாநில பெட்ரோலியத் துறை இயக்குநர் உட்பட பல்வேறு நிதித் துறை சார்ந்த உயர் பதவிகளில் பணி புரிந்தவர்.
அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக பணியாற்றுகிறார்.
இதில் மிக முக்கியமான விசயம்.. கென்ய நாட்டில் பிறந்த உர்ஜித், அந்நாட்டு குடியுரிமை பெற்றவர்!
Patrikai.com official YouTube Channel