சென்னை:
தமிழ்நாட்டில் அண்ணா நூற்றாண்டை ஒட்டி 1405 சிறை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு, அண்ணா நூற்றாண்டை ஒட்டி 1405 சிறைக் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளவர்களில் 15-09-2008 அன்று, 7 ஆண்டு சிறைவாசம் முடித்தவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 ஆண்டு சிறை வாசம் முடித்தவர்களும் விடுதலை அளிக்க முடிவுசெய்யப்பட்டு, தமிழக சிறைகளிலிருந்து 22 பெண் கைதிகள் உட்பட, 1405 பேர் , 2008ம் ஆண்டு செப்டம்பர் 15ந் தேதி விடுவிக்கப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்தது.
இதையடுத்து, புழல் சிறையிலிருந்து 111 பேர், கோவை மத்திய சிறையிலிருந்து 296 பேர், பாளையங்கோட்டை சிறையிலிருந்து 273 பேர் உட்பட 1405 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
தமிழகஅரசின் இந்த உத்தரவை அடுத்து, சுப்பிரமணியன் சுவாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அரசியல் காரணங்களுக்காக இந்தக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும், பெருங்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும், ஆகவே அவர்களை திரும்பவும் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி தனது மனுவில் கூறியிருந்தார்.
இதை எதிர்த்து, தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என்றும் சிறை அதிகாரிகள் அளித்த நன்னடத்தைச் சான்றுகளின் அடிப்படை யிலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
எட்டு ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.
அதில், நல்லெண்ண அடிப்படையில் இந்த வழக்கில் கைதிகள் விடுவிக்கப்பட்டது செல்லும் என்றும், 8 ஆண்டுகளாக விடுதலை பெற்று வாழ்பவர்களை மீண்டும் சிறையில் அடைப்பது சட்ட ரீதியாக சரியாக இருக்காது என்றும் கூறிய நீதிபதிகள் வழக்கை முடித்து வைப்பதாகக் கூறி உத்தரவிட்டனர்.