நெட்டிசன் பகுதி:
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி (Suresh Kamatchi) அவர்கள், “தனது மரணத்தை உணர்ந்த நிலையில் அண்ணண் நா..முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதி இருக்கும் கடிதம்” என்ற தலைப்பில் முகநூலில் பதிந்திருக்கும், நா.முத்துக்குமாரின் கடிதம். )
“அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது இது நான் உனக்கு எழுதும்முதல் கடிதம். இதைப்படித்துப்புரிந்து கொள்ளும் வயதில் நீ இல்லை.
வயதின் பேராற்றாங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும். சிறகு முளைத்த தேவதைகள் உன் கனவுகளை ஆசீ்ர்வாதிப்பார்கள். பெண் உடல் புதிராகும்.
என்தகப்பன் என்னிடமிருந்து ஒளித்து வைத்த ரகசியங்கள் அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதைபோல நீயும் தேடத் தொடங்குவாய்.
பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய பருவம் அது. உனக்கு த் தெரியாதது இல்லை. பார்த்து நடந்து கொள்.
நிறைய பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்கு ப்பின்னாலும் இரண்டு கண்களைத்திறக்கின்றன.
கிடைத்த வேலையை விட பிடித்த வேலையைச்செய். இனிய இல்லறம் தொடங்கு. யாராவது கேட்டால்இல்லை எனினும் கடன் வாங்கியாவது உதவி செய். அதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது.
உறவுகளிடம் நெருங்கியும் இரு.விலகியும் இரு. இந்த உலகில் எல்லா உறவுகளையும்விட மேன்மையானது நட்பு மட்டுமே.நல்ல நண்பர்களை ச்சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும்.
இவையெல்லாம் என் தகப்பன் எனக்கு சொல்லாமல் சொன்னவை. நான் உனக்கு சொல்ல நினைத்து ச்சொல்பவை.
என் சந்தோஷமே நீ பிறந்த பிறகுதான் என் தகப்பனின் அன்பையும் அருமையையும் நான் அடிக்கடி உணர்கிறேன்.நாளை உனக்கொரு மகன் பிறக்கையில் என் அன்பையும் அருமையையும் நீ உணர்வாய்.
நாளைக்கும் நாளை நீ உன் பேரன் பேத்திகளுடன் ஏதோ ஒரு ஊரில் கொஞ்சி ப்பேசி விளையாடிக்கொண்டு இருக்கையில் என் ஞாபகம் வந்தால்,இந்தக் கடிதத்தை எடுத்துப்படித்துப்பார்.
உன் கண்களில்இருந்து உதிரும் கண்ணீர் த்துளியில் வாழ்ந்து கொண்டிருப்பேன் நான்.
இப்படிக்கு,
உன் அப்பா
நா.முத்துக்குமார்
(மேற்கண்ட கடிதத்தை, தன் மரணத்தை உணர்ந்த தருணத்தில் நா.முத்துக்குமார் எழுதியதாக குறிப்பிட்டு சமூகவலைதளங்களில் பலரும் பதிந்திருந்தனர். ஆனால் இது ஆனந்தவிகடன் இதழில், நா. முத்துக்குமார் எழுதிய , “அணிலாடும் முன்றில்” என்ற தொடரில் வெளியான கடிதம் என்பது தெரியவருகிறது. ஆனந்தவிகடன் இதழுக்கு நன்றிகள்.)