துவரையிலும் அனுபவித்த ராஜமரியாதைகளை திடீரென நிறுத்திவிட்டு, இனிமேல் உனக்கு அதுபோல் எதுவும் கிடையாது என்று சொன்னால் எப்படி உணர்வீர்கள். வேண்டுமானால் அதுபோன்ற உபசரிப்பு கிடைப்பதற்கு உழைத்து முன்னேறுவேன் என்று சொல்லலாம். ஆனால் போலந்து நாட்டைச் சார்ந்த ஒருவர் என்ன செய்திருக்கிறார் என்று பாருங்கள்.
இணையதளம் மற்றும் மென்பொருள்களில் மாற்றம் செய்து தகவல்களைத் திருடுவதற்கு ­­­­ஹாக்கிங் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும். இதுபோன்ற  தகவல் திருட்டு மற்றும் அவசரநிலைகளை எதிர்கொள்ளும் மற்றும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும் நிறுவனம் ஒன்று போலந்து நாட்டில் இருக்கிறது. இந்த நிறுவனத்தில் தலைமை வல்லுனராக ப்ர்ஸெமக் ஜரோஸ்ஸெவ்ஸ்கி இருந்து வருகிறார்.
பணிநிமித்தம் ஜரோஸ் ஸெவ்ஸ்கி வருடத்திற்கு எழுபது முறைக்கும் மேலாக பல்வேறு நாடுகளுக்கு விமானத்தில் பறக்கக்கூடியவர். இதனால் இவருக்கு ‘அதிகமதிகம் பயணிக்ககூடியவர்’ எனும் சிறப்பு அந்தஸ்தினை விமான சேவை நிறுவனங்கள் வழங்கியிருந்தது. இதனால் இவர் பயணிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானநிலையங்களில் உயர்ரக ஓய்வு அறைகள், உணவு வகைகள் மற்றும் பல சொகுசுகளை ஆடம்பரமாக அனுபவித்து வந்தார். இவர் மிகவும் விரும்பும் விமானநிலையங்களின் ஓய்வறைகளில் துருக்கியின் இஸ்தான்புல் விமானநிலையத்திற்குத்தான் முதலிடம் என்கிறார்.
கடந்த ஆண்டில் ஒருமுறை இவரது சொந்த நாட்டின் வர்சாவ் விமானநிலயத்திலுள்ள ஓய்வறைக்கு அனுமதிக்கும் தானியங்கி கருவி, இவரது போர்டிங் பாஸை சரிபார்த்து உள்ளே செல்ல அனுமதி மறுத்திருக்கிறது. இது ஏதோ தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதனால் கோபமுற்று தாம் அவமதிக்கப்பட்டுவிட்டதாக ஜரோஸ்ஸெவ்ஸ்கி எண்ணியிருக்கிறார். பணிமுடித்து பிறகு தமது அலுவலகம் திரும்பியவர், இனிமேல் தமக்கு ஒருபோதும் அதுபோன்ற அவமானம் ஏற்படக்கூடாது என்று நினைத்திருக்கிறார்.
தனது ஹாக்கிங் திறமையைப் பயன்படுத்தி, 500 வரிகள் கொண்ட ஜாவா ஸ்கிரிப்ட் மூலம் ஒரு மொபைல் அப்ளிகேஷனை ஆண்ட்ராய்ட் தளத்தில் உருவாக்கிவிட்டார். இந்த அப்ளிகேஷனில் பயணியின் பெயர், விமான நிலையங்களின் பெயர்கள், பயண வகுப்பு மற்றும் பயணிக்கும் விமானத்தின் பெயர் ஆகியவற்றைக் கூறினால் போதும். Quick Response என்றழைக்கப்படும் QR Code மூலம் தயாராகும் போலியான போர்டிங் பாஸ் தயார்.
பெரும்பாலான விமானநிலையங்களில் இன்னும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலுள்ள அனைத்து விமானநிலையங்களிலும் இந்த போலி QR Code போர்டிங் பாஸ் பயன்படுத்தி ஆடம்பர ஓய்வறைகளைப் பயன்படுத்தியும், ட்யூட்டி ஃப்ரீ என்று சொல்லப்படும் சுங்கவரி இல்லாத கடைகளுக்குச் செல்லும் சலுகைகளை அனுபவித்திருக்கிறார்.
a
இதுபோன்ற ஹாக்கிங் மற்றும் தரவுகள் திருட்டுப் பாதுகாப்பு குறித்து உலகத்திலுள்ள வல்லுனர்களெல்லாம் ஆண்டுக்கொருமுறை கூடி விவாதிக்கும் மாநாடு அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் ஜரோஸ்ஸெவ்ஸ்கி தனது மொபைல் அப்ளிகேஷனை சமர்ப்பித்துள்ளார்.
இந்த போலி போர்டிங் பாஸை பயன்படுத்தி விமானத்தில் பயணிக்க முடியாதே தவிர, இதுபோன்ற போலியான குறியீட்டைக் காண்பித்து உள்ளே வந்துவிடலாம். உயர்ரக ஓய்வறைகளுக்குச் செல்லமுடியும். டியூட்டி ஃபிரீ கடைகள் வரையிலும் டிக்கெட் இல்லாமலே வந்துவிட முடியும். இங்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே ஏனெனில் மனிதர்களால் விசாரிக்கப்படாமல் கருவிகளை மட்டுமே நம்பியிருப்பதால் அவற்றை எளிதாக ஏமாற்றிவிட முடியும் என்று விளக்கமளித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ஐரோப்பிய நாடுகளிலுள்ள விமான நிலையங்களைத் தவிர வேறு எங்கும் தாம் இதை பரிசோதித்துப் பார்க்கவில்லை, தன் பெயரைத் தவிர வேறு பெயர்களில் முயற்சிக்கவில்லை என்று கூறியுள்ளார். அமெரிக்க விமானநிலையங்கள் நிச்சயம் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பில் இருக்கும் ஒருவேளை இந்த அப்ளிகேஷன் அங்கு பயனாகாது என்றும் கூறியுள்ளார்
இதுபற்றிய கேள்விக்கு IATA எனப்படும் சர்வதேச வான்வெளி போக்குவரத்து ஆணையம் பதிலளிக்கும்போது, “இது முழுக்க முழுக்க விமான நிறுவனங்கள் சார்ந்த விசயம், ஏனெனில், போர்டிங் பாஸ் வழங்குவதும் அதைச் சரிபார்ப்பதும் அவர்களின் முக்கிய பணிகளுள் ஒன்றாகும். இருப்பினும், விமானத்திற்குள் நுழையும்முன் அதிகாரப்பூர்வ பட்டியளின்படியே சரிபார்க்கப்பட்டு அனுமதிக்கப்படும் என்பதால் இதுபோன்ற போலி போர்டிங் பாஸ் மூலம் பயணிக்க முடியாது.” என்று தெரிவித்திருக்கிறது.
பேப்பர் போர்டிங் பாஸை தூக்கித் திரிவதை, ஸ்மார்ட் போன் QR Code மூலம் எளிதாக்கியது. தொழில்நுட்பத்திற்கு பயணிகள் நன்றி தெரிவித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டு, பத்து வினாடிகளில் போலி போர்டிங் பாஸ் தயாரிக்க முடியும் என்று அச்சுறுத்துவதும் அதே தொழில்நுட்பம்தான். தற்போது விமானநிலையப் பாதுகாப்பில் இது பெரும் சர்சையைக் கிளப்பியிருக்கிறது.