ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் 500 மாடுகள் பட்டினியால் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாடுகளை கோமாதா என்றும், அந்த புனிதமான மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்றும் இந்துத்துவவாதிகள் குரல்கொடுத்துவருகிறார்கள். இதை ஆளும் பாஜக ஆமோதிக்கிறது. அக்கட்சி ஆட்சி உள்ள மாநிலங்கள் சிலவற்றில் மாடுவெட்ட தடை செய்யும் சட்டத்தையும் இயற்றி உள்ளது.
இந்த நிலையில் மாட்டுக்கறி வைத்திருந்ததாகவும், மாட்டை வெட்டியதாகவும் கூறி தலித் மற்றும் இஸ்லாமியர்கள் இந்துத்துவவாதிகளால் தாக்கப்படும் சம்பவங்களும் தொடரந்து நடந்துவருகின்றன. இப்படி தாக்குதலில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக பாஜக பிரமுகர்கள் தொடர்ந்து பேசியபடி இருக்கிறார்கள்.
ஆனால் பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில், 500 மாடுகள், பட்டினியால்  பலியாகிவிட்டன.
3
ஜெய்ப்பூர் அருகே ஹிங்கோனியாவில் மாடுகள் காப்பகம் (கோசாலை) உள்ளது. இங்கு 250க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காத காரணத்தினால் இவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த காப்பகத்தில் பராமரித்து வந்த ஐநூறுக்கும் மேற்பட்ட மாடுகளை கவனிக்க யாரும் இல்லை. இவை,  கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கடும் மழையிலும் குளிரிலும் தவித்தன. தவிர இவற்றுக்கு உணவும் அளிக்கப்படவில்லை.
இதனால் கடந்த இரு வாரங்களில் மட்டும் 500 மாடுகள் பலியாகிவிட்டன. மேலும் பல மாடுகள் குற்றுயிருராய் கிடக்கின்றன.
2
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தன்னார்வலர்கள் மாடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இறந்த மாடுகளை பரிசோதித்த மருத்துவர்,  மாடுகள் நோய் தாக்கி பலியாகவில்லை என்றும் பட்டினியால் தான் இறந்தன என்றும் உறுதி செய்தார்.
தற்போது இது தொடர்பான விசாரணைக்கு அம்மாநில முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா உத்தரவிட்டிருக்கிறார்.