பிரேசில்:
பிரேசிலில் 31வது ஒலிம்பிக் போட்டி இன்று அதிகாலை 4.30 மணி அளவில் கோலாகலமாக தொடங்கியது.
ரியோ யோடிஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற மரக்கானா மைதானத்தில் 31 வது கோடைக்கால ஒலிம்பிக்போட்டிக்கான தொடக்கவிழா நிகழ்ச்சிகள் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கியது.
வான வேடிக்கையுடன் கோலாகலமாக தொடங்கிய விழாவில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள் கண்கவரும் வகையில் அமைந்திருந்தது.
பிரேசிலின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு உணர்வுபூர்வமான கலைநிகழ்ச்சிகள், அதிரடிநடனங்கள், சாகசங்கள் மற்றும் லேசர்ஷோ, வண்ணமய மான வாணவேடிக்கை நடைபெற்றது.
இந்த போட்டியில் 206 நாடுகள் பங்கேற்கிறது. சுமார் 11,178 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
விழாவில் 40 நாட்டு தலைவர்கள் பங்கேற்றதாக செய்திகள் தெரிவிக்கிறது.
அணிவகுப்பில் ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸ் நாடு முதலில் அணிவகுத்து மைதானத்தை சுற்றி வந்தது. இந்தியா 95-வதாக அணிவகுப்பில் கலந்துகொண்டது. கடைசியாக பிரேசில் அணியினர் அணிவகுத்து வந்தனர்.
உலக நாடுகளில் இருந்து ஒலிம்பிக் போட்டியை காண ஆயிரக்கணக்கானன ரசிகர்கள் பிரேசில் வந்துள்ளனர்.
உலக தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், ரசிகர்கள் என மொத்தம் 78 ஆயிரம் பேர் தொடக்க விழாவை கண்டுகளிக்கும் வகையில் தொடக்கவிழா நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
ஒலிம்பிக்போட்டி நடை பெறுவதை முன்னிட்டு 85 ஆயிரம் துணை ராணுவ படையினர்பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதுதவிர ஒலிம்பிக்போட்டி தொடர்பான பணிகளில் அரசு அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள், தனியார் ஊழியர்கள், 50 ஆயிரம் தன்னார்வ தொண்டர்கள் என்று மொத்தம் 90 ஆயிரம்பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிவைக்க இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில், அவரது உடல் நலம் சரியில்லாத காரணத்தால் பீலே ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்துகொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் அவர் பங்கேற்காதது அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்அமெரிக்காவில் அரங்கேறும் முதல் ஒலிம்பிக் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.