அடுத்த ஆண்டில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று துவக்கினார்.
நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அங்கு தற்போது சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை இன்று துவக்கினார்.
டில்லியில் இருந்து விமானம் மூலம் காலை 11.15 மணியளவில் வாரணாசி நகரை வந்தடைந்தார். அவரை உத்தரப்பிரதேசம் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் உள்ளிட்டோர் வரவேற்றனர். பாபட்பூரில் இருந்து கார் மூலம் நகரின் பல பகுதிகளில் கடந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவர் ஊர்வலமாக சென்று தனது பிரச்சாரத்தை துவக்கினார்.
1
சோனியாவின் காருடன் சுமார் 10 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் அணிவகுத்து சென்றார்கள்.
முதலில் காரில் பயணம் செய்த சோனியா காந்தி, பின்னர் திறந்த வெளி ஜீப்பில் நின்று தொண்டர்களுக்கு கை அசைத்தவாறு சென்றார். அப்போது  மோடி அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினார்.
சோனியா காந்தியுடன் உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஷீலா தீட்சித், குலாம் நபி ஆசாத், ராஜ்பப்பர் மூத்த தலைவர்கள் பிரமோத் திவாரி மற்றும் சஞ்செய் சிங் உள்ளிட்டோரும் பின் தொடர்ந்து சென்றார்கள்.
பலமணி நேரம் தொடர்ந்து பிரச்சார அணிவகுப்பில் கலந்துகொண்ட  சோனியா காந்திக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது.  ஆகவே, பேரணியில் இருந்து வெளியேறி ஓய்வெடுத்தார்.
சோனியா காந்தி, விரைவில் முழு உடல் நலம் பெற வேண்டும் என்று   பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்