உணவு வீணாகக் காரணம்: உலகப் பொருளாதார அமைப்பா ? தனிநபர் அலட்சியமா ?
“”தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாடினார் பாரதியார். தற்பொழுது தனி ஒருவனுக்கு உணவு கிடைக்காத நிலையை உருவாக்குபவரைத் தண்டிக்க வேண்டும் எனும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது இன்றைய உலகப் பொருளாதார அமைப்பு.
இன்றைய உலக பொருளாதார அமைப்பு ஒரு பக்கம் உணவு விரயத்தை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் இந்தியாவிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 40 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவினால் பீடிக்கப்பட்டிருப்பதற்கும் காரணமாக இருக்கிறது. ஏழை நாட்டு குழந்தைகள் பட்டினியால் சாகின்றன. உலக முதலாளித்துவத்தின் சாதனை இது!
உணவு வீணாக முக்கிய காரணம் விற்காமல் தேங்கிப் போகும் காய்கறி, பழங்கள், உணவு விடுதிகளில் சாப்பிடாமல் வைக்கப்படும் உணவு வகைகள், வீடுகளில் அதிகமாகத் தயாரிக்கப்பட்டு கெட்டுப் போகும் உணவு போன்றவை என தெரிவிக்கின்றது இயற்கை ஆதாரங்கள் பாதுகாப்பு கவுன்சில் (என்.ஆர்.டி.சி).
இந்தியர்கள், சீனர்கள், அமெரிக்கர்கள் வீணாக்கும் உணவு மதிப்பு :
$165 பில்லியன் வீணடிக்கும் அமெரிக்கர்கள்:
அமெரிக்கர்கள் தாம் வாங்கும் உணவில் பாதி அளவை வீணாக்குகிறார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அப்படி வீணாகும் உணவுப் பொருட்களின் மதிப்பு ஆண்டுக்கு $165 பில்லியன் (சுமார் 66. 15 கோடி ரூபாயாகும்.)
அமெரிக்காவில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களில் 40 சதவீதம் வீணாக்கப்படுவதாகவும், நான்கு பேரைக் கொண்ட ஒரு சராசரி அமெரிக்க குடும்பம் ஒரு ஆண்டுக்கு $2,275 (சுமார் ரூ 1.51 லட்சம்) மதிப்பிலான உணவைக் குப்பையில் போடுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 1970களில் இருந்ததை விட உணவு வீணாவது 50 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் ஆய்வை நடத்திய என்ஆர்டிசி என்ற நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்தியா வீணடிக்கும் உணவு 58,000 கோடி ரூபாய்:
ஆண்டுதோறும் இந்தியா 250 மில்லியன் டன் அளவுக்கு உணவுத் தானியம் உற்பத்தி செய்கிறது. ஆனால் 250 மில்லியன் மக்கள் இரவுவேளை உணவு இல்லாமல் பட்டினியோடு படுக்கிறார்கள். உற்பத்தியாகும் உணவு தானியங்களில் ஏறத்தாழ 40% வீணாகி விடுகிறது. இப்படி வீணாகி விடும் உணவு தானியங்களின் மதிப்பு 58,000 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 15,000 டன் உணவுகளை வீணடிக்கிறோம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதில் மிகவும் வருந்தத்தக்க செய்தி, “இந்த உணவுகளில் 3,000 டன் உணவுகள் சாப்பிடத் தகுதியான உணவுகள்”.
ரூ.2 லட்சம் கோடி உணவு வீணடிக்கும் சீன மக்கள்: கடந்த 2014ம் ஆண்டு, சீன உணவு தானிய துறை அதிகாரி, வு ஜிடான் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உணவு சாப்பிடும்போது பரிமாறப்படும் உணவு அனைத்தையும், சீனர்கள் சாப்பிட்டு முடிப்பதில்லை; அவற்றில் கொஞ்ச உணவை மிச்சம் வைக்கின்றனர். இவ்வாறு மீதமாகும் உணவின் மதிப்பு, ஆண்டுக்கு, இரண்டு லட்சம் கோடி ரூபாய் இருக்கும். அந்த உணவை மிச்சப்படுத்தினால், 20 கோடி பேர் உணவருந்த முடியும். விளைவிக்கப்பட்ட உணவு தானியங்களைக் கிட்டங்கிக்கு எடுத்துச் செல்லும்போது, அங்கிருந்து பிற இடங்களுக்குக் கொண்டு செல்லும்போது, 3,500 கோடி கிலோ உணவுத் தானியங்கள் வீணாகுகின்றன.
ஃப்ரென்ச் அரசின் முன்மாதிரிச் சட்டம்:
ஃப்ரென்ச் அரசு உண்ணத்தகுந்த உணவுகளை வீணடிக்கத் தடை விதித்து சட்டமியற்றி உள்ளது .
குறிப்பாக ஷாப்பிங் மால்கள் விற்காத உணவுப்பண்டங்கள், காய்கறிகளை குப்பையில் கொட்டுவதை தடைசெய்துள்ளது. திருமணம் போன்ற விசேசங்களில் வீணாகும் உணவு, வீடுகளில் வீணாகும் உபரி உணவுவகைகளை வீணாவதற்கு முன்னரே அனாதை ஆசிரமங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு தானமாக வழங்க உத்தரவிட்டுள்ளது.
உணவு உற்பத்தியின் மதிப்பு தெரியாதவர்கள்:
எறும்பும் தேனீயும் மட்டும் உணவு சேமிக்கும் முறையை இயல்பாகவேப் பெற்றுள்ளன. உணவுப் பொருள்களை வழங்கும் உழவன் கடுமையாக உழைக்கிறான். விடியலில் எழுகிறான். வயலில் உழுகிறான். கடுமையாக உழைத்துப் பாடுபடுகிறான். முன்பு பண்ட மாற்று முறை இருந்தது. அப்போது உழைப்புக்கு மதிப்பு இருந்தது. நெல் விளைவித்தவனைப் பருப்பு விளைவித்தவன் மதிக்கும் நிலை இருந்தது. பண்ட மாற்று முறையைப் பின்னர் வந்த பணம் மாற்றியது; பணம் தந்து, தான் எந்த உணவுப் பொருளையும் எளிதாக வாங்க முடியும் என்ற நிலை பிறந்தது. உழைப்பின் உயர்ந்த மதிப்பு தாழ்ந்தது. உணவுப் பொருளை வீணாக்கும் மன உணர்வும் பிறந்தது என்கிறார் முனைவர் மலையமான்.
அரசின் கடமை:
அரசு தனது கொள்கைகளை மாற்றிக் கொண்டு, அரசுக் கிடங்குகளில் வீணாகும் முன்னரே, உணவு தானியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஃபிரென்ச் அரசு போல் கடுமையான சட்டங்கள் இயற்றி பெருமுதலாளிகள் உணவினை குப்பையில் கொட்டுவதை தடை செய்ய வேண்டும்.
தனிநபர் கடமை:
நம்மால் முடிந்தது, நாம் குழந்தைகளுடன் சாப்பிடும் விசேஷங்களில், குழந்தைக்கென்று தனி இலை ஒதுக்கி உணவை வீணாக்காமல், நமக்கு வேண்டிய அளவை மட்டுமே கேட்டு வாங்கி சாப்பிடுவதும். வீடுகளில் தேவையான அளவு மட்டும் உணவை சமைத்து வீணடிக்காமல் சாப்பிட்டு முடிப்பதும் நமது கடமையாகும். குடும்பத்துடன் உணவருந்த ஓட்டலுக்கு செல்லும் போது எல்லோருக்கும் சேர்த்து தேவையான அளவு மட்டும் ஆர்டர் செய்ய வேண்டும். சிறு வயதில் இருந்தே தட்டில் மிச்சம் வைக்காமல் சாப்பிட குழந்தைகளைப் பழக்க வேண்டும்.
நாமும் உணவை மிச்சப் படுத்த பழகுவோம்.