தமிழ் இதழ்களில் பணிபுரியும் இதழாளர்களை, கேரள பத்திரிகையாளர் மன்றம் புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது.
கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர் மன்றம் (பிரஸ் கிளப்) உள்ளது. இங்கு தமிழ் இதழ்களில் பணிபுரிபர்களை சேர்த்துக்கொள்வதில்லை என்று புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் இருந்து வெளியாகும் தினகரன் நாளிதழின் கேரள நிருபராக, திருவனந்தபுரத்தில் இருந்து பணியாற்றுகிறார் ஏ.கே. அஜித்குமார். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அவர் திருவனந்தபுரத்தில் இருந்து பணியாற்றியும் அவரை, அங்குள்ள ப்ரஸ் கிளப்பில் சேர்க்க நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை. இவரைப்போலவே தினத்தந்தி நிருபராக திருவனந்தபுரத்தில் பணியாற்றும் ஜேசு டென்னிசனையும் ப்ரஸ் கிளப்பில் சேர்க்க அநுமதிக்கவில்லை.
இது குறித்து ஏ.கே. அஜித்குமாரிடம் கேட்டோம். அவர், “திருவனந்தபுரம் ப்ரஸ் கிளப்பில் இருந்து செய்தி தொடர்பான தகவல்களை அனுப்புவார்கள். அங்குள்ள நிர்வாகிகள் நேரில் நன்றாகவே பழகுகிறார்கள். ஆனால், ப்ரஸ்கிளப்பில் சேர்க்க அனுமதிப்பதில்லை. இது குறித்து நேரடியான பதிலும் தருவதில்லை.
“மலையாளம் மற்றும் ஆங்கில பத்திரிகையில் பணிபுரிபவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள் என்றும், கேரளத்தில் அச்சிடப்படும் இதழ்களில் பணிபுரிபவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள் என்றும் இருவேறுவிதமாக கூறுகிறார்கள்” என்றார்.
தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பது, மூணாறு பகுதியை பூர்வீகமாக கொண்டு வசிக்கம் தமிழர்களுக்கு உரிமைகள் மறுப்பது, என கேரள அரசு மற்றும் அரசியல்வாதிகளைப்போலவே, கேரள பத்திரிகையாளர்களும் செயல்படுவது சமூக ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
“சாதி,மத, இன வேறுபாடுகளைக் கடந்து பணியாற்ற வேண்டிய ஊடகத் துறையில் மொழி, இனம் சார்ந்து சிலரை ஒதுக்குவது என்பது நியாயமில்லை. மேலும், இதுபோன்ற இனவாதத்தை எதிர்த்து பணியாற்ற வேண்டிய பத்திரிகையாளர்களே, மலையாள இன வெறியுடன் நடந்துகொள்வது தவறு” என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.