புதுடெல்லி:
பிஜேபி அரசு பதவி ஏற்ற இந்த இரண்டு ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு 53 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இந்தியாவில் முதலீட்டுக்கான சூழல் தற்போது சாதகமாக உள்ளது. விலைவாசி, பணவீக்கம் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டிருப்பது பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோலாய் உள்ளது. இதன் காரணமாகவே அந்நிய நேரடி முதலீடு 53 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார்.

முதலீடு செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும் என நம்பினால் மட்டுமே முதலீட்டாளர்கள் நம் நாட்டில் முதலீடு செய்ய முன்வருவர் என்றும், தற்போது இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்றார்போல் எளிதான சூழல் உருவாக்கப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
மத்திய அரசு மேற்கொண்ட ஒருங்கிணைந்த அந்நிய நேரடி முதலீட்டு சீர்திருத்தங்களின் பயனாக முதலீடு 2015-16-ம் நிதி ஆண்டில் அதிகரித்துள்ளது என்றார்.
இந்த இரண்டு ஆண்டுகளில் 53 சதவிகித பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டியிருப்பது பெரும் சாதனை என்றும் கூறினார்.
மேலும், கொள்கை ரீதியில் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது, இதன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமின்றி உள்நாட்டு முதலீட்டாளர்களும் முதலீடுகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர் என்றார்.

மற்றொரு கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் கூறியதாவது:
பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவததால் இந்திய பொருளாதாரம் ஸ்திரத்தன்மையாக உள்ளது. இதனால் இந்தியா சர்வதேச அளவில் வளரும் நாடாக உருவெடுத்துள்ளது.
மொத்த அந்நிய மூலதனத்தில் சேமிப்பின் பங்கு 96.3 சதவீதமாக உள்ளது. இது நமது இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதைக் காட்டுகிறது என்றார்.
Patrikai.com official YouTube Channel