மலையாளத்தில் வெளியான “ ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா , தமிழில் வெளியான இருவர், போன்ற படங்களுக்கு பிறகு.. மோகன்லாலுடன் கவுதமி இணைந்து நடித்திருக்கும் படம் “ நமது “.
இந்த படம், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.
இப்படம் சம்மந்தமாக பத்திரிகையாளர்களை சந்தித்த கவுதமி, “இயக்குனர் சந்திர சேகர் ஏலட்டி என்னை தொடர்பு கொண்டு கதை சொல்ல வேண்டும் என்று கேட்டார். அவர் இயக்கிய “ அய்த்தே “ என்ற படம் ஆந்திரா முழுவதும் அவர் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. அத்துடன் தேசிய விருதையும் வாங்கி கொடுத்த படம் அது. அவர் மீது எல்லோருக்கும் ஒரு மதிப்பு இருப்பதால் நானும் கதை கேட்க சம்மதித்தேன். அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்தது. நான் எது மாதிரியான கதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேனோ.. அது மாதிரியான கதாப்பாத்திரத்தை அவர் சொன்னதால் நடிக்க ஒப்புக்கொண்டேன்” என்றார் கவுதமி.
தொடர்ந்து கவுதமியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவரது பதில்களும்…
“படத்தின் கதை என்ன?”
“நான்கு தலை முறைகளை சேர்ந்தவர்களும் ஒன்றாக அமர்ந்து பார்க்க கூடிய வன்முறை இல்லாத படம். நன்கு கதாப்பத்திரங்களை சுற்றி ஒரு கதை. நால்வரும் சந்திக்கும் போது. படத்தின் கிளைமாக்ஸ் புது மாதிரியாக இருக்கும். ஊர்வசி காமெடியில் கலக்கி இருக்கிறார்!”
“நீங்கள் சமீபத்தில் நடித்த பாபநாசம் படத்தைப் பார்த்துத்தான் உங்களை இந்த படத்துக்கு தேர்வு செய்தாரா இயக்குநர்? ”
“நானும் இயக்குநரிடம் இதே கேள்வியைக் கேட்டேன். அவர், பாபநாசம் படத்தை தான் பார்க்கவில்லை என்றும் இந்த கதையை நான் இரண்டு வருடங்களாக எழுதியதாகவும் சொன்னார். மேலும், இந்த கதாப்பாத்திரத்தில் நீங்கள் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று அவர் சொன்னது எனக்கு பெருமையாக இருந்தது! ”
“தொடர்ந்து நடிப்பீர்களா?”
”நிச்சயமாக.. ! பதினாறு, பதினேழு வயதில் நடிக்க வந்து இதுவரை 120 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். இப்பொழுது மேக்கப் போட்டு நடிக்கவில்லை என்றாலும் சினிமாவை விட்டு எங்கும் போகவில்லை. அது என் ரத்ததிலேயே ஊறியது. எனக்கு ஏற்ற கேரக்டர் என்றால் நிச்சயம் நடிப்பேன்!”
“கமல்ஹாசன் எப்படி இருக்கிறார்?”
”குணமாகிக்கொண்டு வருகிறார். ஓடியாடி வேலை செய்தவர் இப்போது ஒரே இடத்தில் இருப்பது அவருக்கு வேதனையாக இருக்கிறது!”
”கபாலி படத்தை பார்த்து கமல் விமர்சனம் எழுதியதாக சமூக வலை தளங்களில் செய்தி பரவியது. பிறகு, அது வதந்தி என்பது தெரியவந்தது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்..?”
”காலில் அடிபட்டு படுத்திருக்கிற கமலால் எப்படி படம் பார்க்க முடியும். அது தவறான செய்தி. அவ்வளவுதான்!”
“உங்கள் மகள் சுப்புலட்சுமியை எந்த துறையில் ஈடுபடுத்த எண்ணம்?”
“கலைத் துறைதான் அவங்களுக்கும் விருப்பம். இதில் இயக்கமா, நடிப்பா, வேறு எதுவுமா என்பது அவரது விருப்பம்” என்று பேட்டியை முடித்தார் கவுதமி.