குற்றம்கடிதல்: 13
மிழ்நாடு இதுவரை எத்தனையோ சட்டமன்றக் கூட்டத் தொடர்களைக் கண்டுள்ளது. அவற்றில் 2016 தேர்தலுக்குப் பிறகு அமைந்துள்ள சட்டமன்றம் புது விதமானது. ஒரே எதிர்க்கட்சி என்ற நிலை. அதிலும் எதிர்க்கட்சி பலமான எதிர்க்கட்சியாக அமைந்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆறு முனைப் போட்டி காணப்பட்ட போதிலும் மக்கள் தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் தமிழகத்தின் முக்கியமான இரண்டு திராவிடக் கட்சிகளையே தேர்வு செய்து அனுப்பியுள்ளனர். நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் நூற்றாண்டு விழா கொண்டாடும் தருணத்தில் இது மிக முக்கியமான விழுமியமாகும். இதற்கு வழிவகுத்த காரண காரியங்கள் பற்றி இங்கு விவாதிக்கப் போவதில்லை.

கனவில் தமிழ்நாட்டு மக்கள் திளைத்தனர்
கனவில் தமிழ்நாட்டு மக்கள் திளைத்தனர்

ஆனால், அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக 89 இடங்களைப் பிடித்து பலமான எதிர்க்கட்சியாக திடமாக அமர்ந்துள்ளது. 9 இடங்களில் வென்றுள்ள காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சிக்கு ஆதரவான கட்சி. ஆளும் கட்சி 134 இடங்களையும் எதிர்க்கட்சிகள் 98 இடங்களையும் பிடித்துள்ள நிலையில் வேறு கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடையாது. தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒரு எதிர்க்கட்சி இவ்வளவு பலத்துடன் அமர்ந்துள்ளது இதுவே முதல் முறை. அதுபோல இடதுசாரிக் கட்சிகளுக்கு ஒரு இடம்கூட அளிக்காத சட்டமன்றமும் இதுதான். அது மட்டுமல்லாமல் தலித் மற்றும் சிறுபான்மை சமூகங்கள் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகளும் அதிகாரப்பூர்வமாக இச் சட்டமன்றத்தில் இடம் பெறவில்லை.
அதிமுக, திமுக என்ற இரு கட்சிகளை நம்பியே மக்கள் இந்த சட்டமன்றத்தை ஒப்படைத்துள்ளனர். தமிழக அரசியலில் காணாமல் போன அரசியல் நாகரிகம், மக்கள் நலனை முன்வைத்த ஆரோக்கியமான விவாதங்கள், ஆளும் கட்சி அறிவித்த தேர்தல் வாக்குறுதி அல்லாமல் பிற மக்கள் நலத் திட்டங்கள் குறித்த ஆலோசனைகள் என்ற கனவில் தமிழ்நாட்டு மக்கள் திளைத்தனர்.
மாண்புமிகுக்கள்..
மாண்புமிகுக்கள்..

புதிய அமைச்சரவை பதவியேற்புக்கு முக்கிய எதிர்க் கட்சித்தலைவருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்காதது குறித்து ””மாண்புமிகு”” முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை மிகுந்த நம்பிக்கை அளித்தது. அதேபோல சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்புக்காகச் சட்டமன்றத்தில் கூடியபோது ””மாண்புமிகு”” முதல்வரும், ””மாண்புமிகு”” எதிர்க்கட்சித் தலைவரும் பரஸ்பரம் முகமன் கூறியது முதல், தொடர் நிகழ்வுகள் மேலும் நம்பிக்கை அளித்தன.
கடந்த சட்ட மன்றங்கள் போல் ஆளும் கட்சி அசுர பலத்தில் இல்லை என்பதை ஆளும் கட்சி உணர்ந்திருக்கிறது; அதனால் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும் என்ற நம்பிக்கையையும் அவைத் தலைவரின் நடவடிக்கைகள் ஊட்டின. ஆட்சி அமைக்கும் வாய்ப்பினை மயிரிழையில் தவற விட்டதை உணர்ந்து எதிர்க்கட்சித் தரப்பும் ஆரோக்கியமாகச் செயல்படும் என்ற நம்பிக்கையை மக்களும் நடுநிலையாளர்களும் தமக்குத் தாமே வளர்த்துக் கொண்டனர்.
ஆனால் அதைப் பற்றியெல்லாம் யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று தமிழக மக்கள் நொந்து நூடுல்ஸ் ஆகிறார்கள். ஏறக்குறைய கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து வரும் லாவணிக் கச்சேரிதான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறாது.
விவாதங்களின்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஐந்து முறை முதல்வராக இருந்தவரும் 14 முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வருபவரும் தற்போதைய எதிர்க்கட்சியின் தலைவருமான முன்னாள் முதல்வரின் பெயரைச் சொல்லி ஆளும் கட்சியினர் அழைக்கிறார்கள். பதிலடியாக முதல்வரின் பெயரைச் சொல்லி எதிர்க்கட்சியினர் அழைக்கிறார்கள். இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே சட்டமன்றம் கூடும் நாட்கள் குறைந்து வருகிறது என்ற அதிருப்தி மக்களிடையே நிலவி வரும் நிலையில் சட்டமன்றம் கூடும் நாட்களிலும் இது மட்டுமேதான் பஞ்சாயத்தாகப் போகிறதோ என்ற கவலை உருவாவதில் தவறில்லை என்றே தெரிகிறது.
இது இப்படியே தொடர்ந்தால், அவை கூடியதும் யாராவது ’மஞ்சள் பையை தூக்கிக்கொண்டு ….. ரயில் ஏறியவர்’ என்றும், ’மோரில் …………. கலந்தது யாரென்று தெரியாதா’ என்றும் ஆரம்பித்து விடுவார்கள், அப்புறம் அவை நடவடிக்கைகள் நடந்த மாதிரிதான்.  ஏனென்றால் கடந்த 1989 முதல் சட்டமன்றம் இதைத்தான் கண்டு வருகிறது. முன்பு இதையெல்லாம் சுட்டிக்காட்ட இடதுசாரிகள் உள்ளிட்ட நடுநிலைக்கட்சியினர் அவையில் இருந்தனர். இப்போது அவர்களும் கிடையாது.
மக்கள் இரு திராவிடக் கட்சிகளுக்கு அரிய வாய்ப்பினை அளித்துள்ளனர். அதே நேரத்தில் இரு கட்சிகள் இடையேயான அரசியல் நாகரிகம் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. அனைத்துக் கட்சிகளும் மக்களுக்குச் சேவை செய்வதாகத்தான் கூறுகின்றன. அதற்கான களப்பணி, போராட்டங்கள் என்பது வேறு. ஆனால் நேரில் சந்திக்கும்போது முகமன் கூறுவது தவறா? பூங்காவில் நடைபாதையில் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க நேரும்போது கை குலுக்கினால் கட்டம் கட்டப்படுவோம் என்ற அச்சம் எதற்காக உருவாக வேண்டும்?
வாழ்த்து கூறிக்கொள்கிறார்கள், நலம் விசாரிக்கிறார்கள்..
வாழ்த்து கூறிக்கொள்கிறார்கள், நலம் விசாரிக்கிறார்கள்..

பாஜகவும் காங்கிரசும் இரு துருவங்கள். மேடைகளில் பேசும் பேச்சுகளைப் பார்த்தால் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்வது சாத்தியமே இல்லை என்று தோன்றும், ஆனால் பிரதமர் மோடிக்கு, சோனியா காந்தி பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறார். சோனியாவின் உடல் நலம் குறித்து மோடி விசாரிக்கிறார். பொது நிகழ்வுகளில் இருவரும் அருகருகே அமர்ந்து முகமன் கூறுவது மட்டுமல்லாமல் நலம் விசாரித்துக்கொண்டு, பல விஷயங்கள் குறித்தும் உரையாடுகிறார்கள்.
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பரம வைரி மம்தா பானர்ஜி. ஜோதிபாசு உடல்நலம் குன்றிய தகவல் தெரிந்து அவர் நலம் விசாரிக்கிறார். அவரது மரணத்துக்கு அஞ்சலி தெரிவிக்கிறார்.
கடந்த மே 15 வரை கீரியும் பாம்புமாக இருந்தவர்கள் பிரணயி விஜயனும் உம்மன் சாண்டியும். ஆனால் தேர்தலில் இடது முன்னணி வெற்றி அடைந்தவுடன் பிரணயி வாழ்த்துச் சொல்ல உம்மன் சாண்டி கிளம்புவதற்கு முன்பாகவே அவரிடம் வாழ்த்து பெற சாண்டி வீட்டு வாசலில் நின்றார் பிரணயி.
இவையெல்லாம் மக்களுக்கும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை உருவாக்குகிறது. கடந்து போன வாக்குப்பதிவு குறித்து ஆயிரம் குறை சொல்லலாம். புகார்கள் கூறலாம், ஆனால் ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பை மதிப்பது அவசியம். அதே நேரத்தில் எண்ணிக்கையில் குறைந்த இடம் பெற்றதால் அவர்களுக்கு மக்கள் ஆதரவே இல்லை என்றும் கூற முடியாது. இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி பெற்ற வாக்குகளுக்கும் எதிர்க்கட்சி பெற்ற வாக்குகளுக்கும் இடையில் 3 – 4% வாக்குகள் கூட வித்தியாசம் கிடையாது. எந்தத் தேர்தலிலும் ஆளும் கட்சி 50%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைத்ததில்லை. இது நமது தேர்தல் அமைப்பின் அம்சம்.
அதனால் மக்கள் தீர்ப்பை மதித்து ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் நடந்து கொள்ள வேண்டும். மேலை நாடுகளில் மேலதிகாரிகளைப் பெயர் சொல்லி அழைக்கும் வழக்கம் இருக்கிறது. அதுவே மரியாதையாகவும் உலகெங்கிலும் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் ஒருவருக்குப் பெயர் வைப்பது என்பதே அழைப்பதற்குத்தான். அது மட்டுமல்லாமல் உயர் பதவிகளில் இருப்பவர்களை அவரது பதவியைச் சொல்லி அழைப்பதும் மேலைய நாகரிகங்களில் மரபாக இருக்கிறது. எவ்வளவு சோட்டா நிருபராக இருந்தாலும் அமெரிக்க அதிபரை ‘மிஸ்டர் பிரசிடென்ட்’ என்றோ இங்கிலாந்து பிரதமரை ‘மிஸ்டர்/மிஸ் பிரிமியர்’ என்றோ அழைக்க முடியும்.
நாமும் அவர்களைப் போல ஆக வேண்டும் என்றுதானே ஆசைப்படுகிறோம். ஆனால் அவ்வளவுக்கெல்லாம் வேண்டாம், எதிர்க்கட்சி உறுப்பினர் பேசும்போது ””மாண்புமிகு”” முதல்வர் ஜெயலலிதா’ என்று அழைப்பதை நாகரிகமாகக் கருதி ஏற்பதிலோ ஆளும் கட்சியினர் ””மாண்புமிகு”” முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று அழைப்பதை ஏற்பதிலோ என்ன குறை வந்து விட முடியும். அப்படியே குறையாக இருந்தாலும் மக்கள் நலனுக்கான உங்கள் பெருந்தன்மையாகவே அது இருந்து விட்டுப் போகட்டுமே!
கட்டுரையாளர் தொடர்புக்கு:   jeon08@gmail.com ,  https://www.facebook.com/appsmoo