கொழும்பு :
இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து போடப்பட்டுள்ள ஊழல் வழக்குகளால் மன நிம்மதியின்றி அல்லல்படுவதாக செய்திகள் வருகின்றன.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அமைச்சரவை மைத்ரிபால சிறிசேனா தலைமையில் பதவி ஏற்ற பிறகு, முன்னாள் அதிபர் ராஜபக்சே குடும்பத்தினர் மீது ஊழல் புகார்கள் குவிந்து வருகிறது. ஊழல் தொடர்பாக இலங்கை அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏற்கனவே நிதி மோசடி வழக்கில் மகிந்த ராஜபக்சேயின் மகன் நமல் ராஜபக்சே கடந்த வாரம் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். தற்போது அவருக்கு கோர்ட்டு நிபந்தரன ஜாமீன் வழங்கி உள்ளது.
இவர் இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் வர்த்தக நடவடிக்கையில் ரூ.3 கோடி பணத்தை முறைகேடு செய்து உள்ளார். இதை விசாரித்த மாஜிஸ்திரேட், நமல், வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது, வங்கி கணக்குகளை நிதி மோசடி தடுப்பு பிரிவு காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.
அதேவேளையில் ராஜபக்சேயின் சகோதரர் பசில் ராஜபக்சே நிதி மோசடி வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பசில் ராஜபக்சே ஏற்கனவே ஒரு முறை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கை ஆட்சி மாற்றத்துக்கு பின் அமெரிக்காவுக்கு தப்பி ஓடிய பசில், பின்னர் இலங்கை திரும்பியபோது நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
தற்போது ஜாமீனில் வெளியே இருக்கும் இவர் வேறொரு நிதி மோசடி தொடர்பாக நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
ராஜபக்சேயின் இளைய மகன் யோஷிதா ஏற்கனவே கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை முன்னாள் அதிபரின் குடும்பமே ஊழல் வழக்கில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது.
இதன் காரணமாக ராஜபக்சே மன நிம்மதியின்றி அல்லாடுகிறார் என்றும், வழக்குகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ராஜபக்சே குடும்பத்தினர் அரசு மீது குற்றம் சாட்டுகின்றனர்.