சென்னை :
தமிழக சட்டசபை வரும் 21ந்தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் 2016-17ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. இதை முன்னிட்டு தமிழக பட்ஜெட்டில் பல சலுகைகள் இருக்கும் என எதிர்பார்ப்பு இருக்கிறது.
வரும் 21ம் தேதி காலை 11 மணிக்கு 2016-17ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதாக சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்து உள்ளார். இதனால் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் பல புதிய அறிவிப்புகள வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது ஜெயலலிதா அறிவித்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன்படி 110வது விதியின்கீழ் பல திட்டங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பால் விலையை குறைப்பது, மேலும் டாஸ்மாக் கடைகளை மூடுவது, அரசு கல்லூரி பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது பற்றிய அறிகையும் வெளியாகலாம் என தெரிகிறது.
தற்போது ஆவின் பால் விலை, தனியாரின் பால்விலை 5 ரூபாய் குறைவாக உள்ளது. தனியார் பால் கொள்முதல் விலை, அரசு கொள்முதல் விலையைவிட அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஆவின் பால் விலை குறைக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவும் உள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிற கொள்ளை, கொடூர கொலைகள், கூலிப்படையினரின் அட்டகாசம், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை, டாஸ்மாக் கடைகள் மூடுவது பற்றி எதிர்க்கட்சிகள் பேச முடிவு செய்துள்ளன. இதன் காரணமாக சட்டப்பேரவை கலகலக்கும் என எதிர்பார்க்கலாம்.