“காவல்துறை அதிகாரி என்பதோடு, படைப்பாளி, பெண்ணுரிமை போராளி, சமூக ஆர்வலர் என்று திலகவதி ஐ.பி.எஸ்.ஸூக்கு பன்முகங்கள் உண்டு என்பது தெரிந்த விசயம்.
அந்த வகையில், பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து சில கருத்துக்கள நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் திலகவதி ஐ.பி.எஸ்.” என்று முந்தைய (முதல் பகுதி) பேட்டியில் தெரிவித்திருந்தோம்.
இதோ திலகவதி பேசுகிறார்:
“பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க புதிய சட்டங்கள் வேண்டும், சி.சி. டி.வி. கேமரா போன்ற நவீன பாதுகாப்பு வசதிகள் வேண்டும் என்பதெல்லாம் ஒருபக்கம். அடிப்படையான விஷயம், நமக்கு போதிக்கப்படும் சமூக அறங்கங்கள் காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும்.
ஒரு பெண் தன்னை விரும்பவில்லை என்றாலோ தன்னை விரும்பிய பெண் ஏதோ காரணத்துக்காக விலகிச் சென்றாலோ அவளை தாக்குவது என்பது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. பெண்களை போகப் பொருளாக பார்க்கும் ஆண் மனோபாவமே இதற்குக் காரணம்.
இதை, “ஆணாதிக்கம்” என்ற ஒற்றைச் சொல்லில் விளக்கம் சொல்லி ஒதுங்கிவிட முடியாது. சமுதாயத்தில் ஆண் அப்படி வளர்த்தெடுக்கப்படுகிறான்.
ஆணுக்கான நியாயங்களும், பெண்ணுக்கான நியாயங்களும் காலம் காலமாக வேறுவேறாக பிரித்துச் சொல்லப்பட்டே வருகிறது. இந்த சமுக அறங்கள் காலத்துக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும். அதுதான் ஆண் பெண் இருவர் மனதிலும் சரியான புரிதலை ஏற்படுத்தும்.
ஒரு காலத்தில் ஆண் பல திருமணங்கள் செய்துகொள்வது “ஒழுக்கமாக” இருந்தது. ஆனால் இப்போது அப்படியா?
சில நாட்களுக்கு முன், என் வீட்டு தொலைக்காட்சியில் கிருஷ்ணர் தொடர் ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த என் வீட்டு பணிப்பெண் “என்னத்துக்கு கிருஷ்ணருக்கு இத்தனை பெண்டாட்டி” என்று கேட்டாள்.
ஆனால் முற்காலத்தில் பெண்ணின் நிலை என்ன? எப்படிப்பட்ட பெண், “சிறந்த பெண்” என்று போற்றப்பட்டாள்?
சாகுந்தலம் மிக பெரிய இலக்கிய படைப்பாக கொண்டாடப்படுகிறது. வாழ்க்கை அறத்தைச் சொல்வதாகவும் புழகப்படுகிறது. அதில் நாலாவது அத்தியாயத்தில் அதில் வரும் நாலாவது பாடல் மிக முக்கியமானது என்பார்கள்.
அதில் சொல்லப்படுவது என்ன தெரியுமா?
கண்வர் முனிவரின் ஆஸ்ரமத்திலிருந்து சகுந்தலை கிளம்புகிறாள். சகுந்தலையை மகளைப்போல் வளர்த்தவர் கண்வர். அவர் சகுந்தலைக்குச் சொல்கிறார்:
“மகளே! உன் கணவன் துஷ்யந்தன் மன்னனை சந்திக்க அரண்மனைக்குச் செல்கிறாய். உன் கணவனுக்கு ஏற்கெனவே அங்கு பல மனைவியர் இருப்பர். அவர்களுடன் பிணக்கு ஏற்படாமல் அவர்களை ஆதரித்து, அரவணைத்துச் செல்ல வேண்டும். அவர்கள் எல்லோருக்குமான நியாயத்தை நீ செய்ய வேண்டும். அதுதான் உன்னை சிறந்த பெண்மணியாக உயர்த்தும்” என்கிறார்.
இப்படி ஒரு அறிவுரையை இப்போது தனது மகளுக்கு எந்தத் தந்தையாவது சொல்வாரா?
இங்கு மட்டுமல்ல.. உலகம் முழதுமே இப்படித்தான் இருந்தது.
ஆப்பிரிக்க கண்டத்தில் செனகல் நாட்டில் சில பழங்குடியினரிடையே ஒரு வழக்கம் உண்டு. மூத்த மனைவி நல்லவள் என்று பெயர் எடுக்கவேண்டும் என்றால்…
தனது பிறகு கணவன் திருமணம் செய்துகொண்ட மனைவியருக்கு அவள் சரிசமமான நியாயம் செய்ய வேண்டும். அதாவது, அந்த மனைவியருடன் கணவன் தலா மூன்றரை நாட்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்வது இவளது பொறுப்பு. இதுதான் மூத்த மனைவிக்கு சொல்லித்தரப்பட்ட அறமாக இருந்தது.
இதை உலகப்புகழ் பெற்ற எழுத்தாளரான செம்பேன் உஸ்மான், “மூன்று தினங்கள்” என்ற தன்னுடைய சிறுகதையில் பதிவு செய்துள்ளார்.
அவ்வளவு ஏன்… பஞ்சாபில் சமீப காலம் வரை ஒரு வழக்கம் நடைமுறையில் இருந்தது. கணவன் திடுமென இறந்துவிட்டால், அவனது திருமணமாகாத தம்பியை அவள் மணந்துகொள்ள வேண்டும்.
ராஜேந்திரசிங்பேடி என்ற புகழ்பெற்ற பஞ்சாபி எழுத்தாளரின் நாவலில் இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. . அந்த நாவலின் பெயரை தமிழில் சொல்வதென்றால், “முக்காட்டில் ஒரு அழுக்கு” என்று கூறலாம்.
அதில், ஒரு பெண்மணி திருமணம் முடித்து புகுந்த இல்லம் வருகிறாள். கணவனின் கடைசி தம்பி, மிகச் சிறுவன். அவனை, தன் சொந்த மகன் போல பாசம் காட்டி வளர்க்கிறாள். இந்த நிலையில் கணவன் திடுமென இறந்துவிடுகிறான். அவனது மற்ற தம்பியருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது. ஆகவே, அவனது கடைசி தம்பியான அந்த சிறுவனை அவள் மணக்க வேண்டும் என்று குடும்பத்தாரும், உற்றார் உறவினரும் கூறுகிறார்கள்.
“மகன்போல வளர்த்தவனை மணம் செய்துகொள்வதா” என்று துடித்துப்போகிறாள் அந்தப் பெண். ஆனால், “இதுதான் சரி. இதைச் செய்தால்தான் நீ சரியான பெண். ஒழுக்கமான பெண்” என்கிறார்கள் அனைவரும்.
இப்போது இதை ஒப்புக்கொள்ள முடியுமா.?
ஆக ஒரு பெண் எதைச் செய்தாள் “சரியானவள்” என்பது காலம்காலமாக மாறிக்கொண்டே வருகிறது. தற்போதைய சூழலுக்கு ஏற்ப நமது சமூக அறங்கள் மாற்றப்பட வேண்டும். (பெண்ணையோ ஆணையோ பாலியல் சார்ந்து “சரி, தவறு” என்று பிரித்துப்பார்ப்பது நியாயமா என்பது தனி ஒரு கட்டுரையாக எழுத வேண்டிய விஷயம்.)
நாமாக கட்டமைத்துக்கொண்ட இந்த சமூக அறங்கள் எல்லாவிதத்திலும் மாறிக்கொண்டேதான் இருக்கின்றன என்பதையும் உணரவேண்டும். குழந்தைத் திருமணம்தான் ஒரு காலத்தில் “ஒழுக்கமாக” இருந்தது. இப்போது அது சமூக அறப்படியும் சட்டப்படியும் குற்றம்.
விதவைத் திருமணம் என்பது “ஒழுக்கக்கேடு” என்று இருந்த காலம் உண்டு. இன்னும் சொல்லப்போனால் பல பகுதிகளில் கணவன் இறந்தவுடன், மனவியானவள் கணவனின் சிதைத் தீயில் விழுந்த உயிர்விடுவதே “ஒழுக்கமாக” பார்க்கப்பட்டது. இப்போது அதுவும் சமுக அறத்துக்கு எதிரானதுதானே.
“செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்..” என்றார் அவ்வை. ஆனால், பிற்காலத்தில் வந்த பாரதி, “கிளை பல தாங்கேல்” என்றான்.
ராஜாராம் மோகன்ராய் முதல், பெரியார் வரையிலான சமூக சீர்திருத்தவாதிகளால் பெண்கள் வாழ்வில் பெரும் மாற்றம் வந்திருக்கிறது.
பெண்கள் முன்பு போல வீட்டிலே அடைபட்டுக்கிடக்கவில்லை. அவர்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி உரிமை கிடைத்திருக்கிறது. நிறைய படிக்கிறார்கள். அதற்கேற்ற பணிகளுக்குச் செல்கிறார்கள்.
இந்த சூழலில் அவர்கள், பணியிடத்தில் பல ஆண்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. அப்போது இயல்பாக காதல் முகிழ்க்கலாம். அதே நேரம், உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்து ஒருவனை தேர்ந்தெடுப்பதும் நடக்கலாம். சில காலம் சேர்ந்து வாழ்கிறார்கள். பிறகு பிரிகிறார்கள். இது திருமணத்துக்கு முன்னும் பி்ன்னும் நடக்கிறது.
இதை “பழங்கால சமூக அறம்” புகுத்தப்பட்ட ஆண் மணம் ஏற்க மறுக்கிறது. “பெண் என்பவள், என் விருப்பத்துக்கு உடன்பட வேண்டும். எனக்கு விருப்பமில்லாதபோது பிரியும் உரிமையும் எனக்கு மட்டுமே உண்டு” என்கிறது ஆண் மனம். இந்த மனநிலையே பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாகிறது. தாக்குதலிலும், கொலையிலும் வந்து முடிகிறது.
பெண் என்பதால் தாக்கப்படும் இழி நிலையை சமூகத்திலிருந்து போக்கும்!
– டி.வி.எஸ். சோமு