சென்னை:
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் கழுத்தை, காவல்துறையினருடன் சென்ற சிலர் தான் அறுத்ததாக, ராம்குமாரின் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி,  வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை காவல்துறையினர் கடந்த 1ம் தேதி இரவு கைது செய்தனர். காவல்துறையினர் கைது செய்யும் போது அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும், இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.
download (3)
இந்த நிலையில், தற்போது சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராம்குமாருக்கு ஜாமின் கோரி, அவரது வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில்,” ராம்குமார் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை.  கைது நடவடிக்கையின் போது காவல்துறையினருடன் சென்ற சில மர்ம நபர்கள்தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் ராம்குமாருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும், இப்பிரச்னையில், ஏழைக் குடும்பத்தை சேர்ந்த தனது மனுதாரரை காவல்துறையினர் தேவையின்றிக் கைது செய்துள்ளதாகவும் அவரை ஜாமீனில் விட வேண்டும் என்றும் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.