சென்னை:
”பெண்கள் தங்களது புகைப்படங்களை, ‘பேஸ்புக்’கில் பதிவதை தவிர்க்க வேண்டும்,” என்று, முன்னாள் டி.ஜி.பி.,யும், எம்.எல்.ஏ.,வுமான ஆர்.நட்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில், சென்னை மாநகர ஓய்வுபெற்ற போலீசார் நலச்சங்கத்தின், எட்டாம் ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஆர்.நட்ராஜிற்கு பாராட்டு விழா நடந்தது.
அப்போது அவர் பேசியதாவது:
“சென்னை மாநகர காவல்துறையினர் சுவாதி கொலை வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளியை பிடித்துள்ளனர். அவர்களுக்கு என் பாராட்டுகள். இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க, தங்கள் குழந்தைகளோடு பெற்றோர் மனம்விட்டு பேச வேண்டும். அவர்களின் பிரச்னை குறித்து அறிந்து கொள்ள வேண்டும். நேரமில்லை என்று சொல்வதைவிட, இதற்காக நேரம் ஒதுக்க வேண்டும். இப்படிச் செய்தால் விபரீத சம்பவங்கள் ஏறஅபட வாய்ப்பு இல்லை.
காவலர்களும் அனைத்து இடங்களிலும் மக்கள் பார்வையில் இருக்க வேண்டும்.
பெண்கள், தங்கள் புகைப்படங்களை, ‘பேஸ்புக்’ போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். சமூக விரோதிகள், அவற்றை ‘மார்பிங்’ செய்து வெளியிட வாய்ப்பு உள்ளது. புகைப்படங்களை நண்பர்கள் மட்டும் பார்க்கும் வகையில், ‘பேஸ்புக்’கில் உள்ள சிறப்பு வசதிகளை தெரிந்து, அவற்றைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்று நடராஜ் ஐ.பி.எஸ். பேசினார்.
.நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற காவல் துறையினர் தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். முதல்வரிடம் அவற்றை தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க உதவி செய்வதாக, நட்ராஜ் உறுதி அளித்தார்.