மும்பை:
ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை 2-வது முறையாக வகிக்க விரும்பவில்லை என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நியமிக்கப்பட்டவர் ரகுராம் ராஜன். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற  போது பல்வேறு செயலாளர்கள் மாற்றப்பட்டனர்.
ஆனால் ரகுராம் ராஜன் பதவியில் தொடர்ந்தார்.
download
இதற்கு பாரதிய ஜனதாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பாஜகவின் எம்.பி சுப்பிரமணியன் சுவாமி, ரகுராம் ராஜனுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறிவந்தார். பிரதமருக்கும் கடிதங்கள் எழுதினார்.
ரகுராம் ராஜனின் பதவிக் காலம் செப்டம்பர் 4-ந் தேதியுடன் முடிவடைவடைய இருக்கும் நிலையில் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்றும் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி வருகிறார்.
பிரதமர் மோடியும் கூட, ரகுராம் ராஜனின் பதவி நீட்டிப்பு விவகாரம் ஊடகங்களில் விவாதிக்கும் விவகாரம் அல்ல எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் 2-வது முறையாக நீடிக்க விரும்பவில்லை என தெரிவித்தார். இதன் மூலம் ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்குமா என்ற சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றில், “நான் மீண்டும் எனது கல்விப் பணிக்குத் திரும்ப முடிவு செய்திருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
அவருடைய இந்தக் கடிதத்தை ரிசர்வ் வங்கி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
2008ம் ஆண்டு ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியை முன்கூட்டியே கணித்து சொன்ன ஒரு சிலரில் ஒருவரான ரகுராம் ராஜன், இந்தியப் பொருளாதாரத்தை கையாண்ட விதம் குறித்து வெகுவாகப் பாராட்டப்படுகிறார்.