ந்தியா ஒரு விவசாய நாடு. சுமார் 75 சதவீத மக்கள் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். விவசாயிகள் இந்தியாவின் முதுகெலும்பு என்று பேசிய காலம் மலையேறிவிட்டது. உலகமயமாதல், நகரமயமாதல், உள்கட்டமைப்பு, வணிக ஏற்றுமதி, வளர்ச்சி என்று பொருளியல் சூழ்நிலை மாறிவிட்டது.
உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி (ஜி.டி.பி)-சேவை-ஏற்றுமதி மதிப்பில் விவசாயத்தின் பங்கு மிகவும் குறைந்துவிட்டது. இன்று இந்த ஜி.டி.பி.யில் சேவைத் துறையே 50 சதவீதப் பங்குவகிக்கிறது. கணினியே இந்தியாவின் முதுகெலும்பாகிவிட்டது. 2எ, 3எ, 4எ, 5எ என்று ஜிக்கள் வாழுமிடங்களில் கோடிகளும் வாழ்கின்றன.
கட்செவி அஞ்சல், யூ}டியூப், ஐ}போன் என்று என்னென்னமோ சொல்கிறார்கள். இவையெல்லாம் சேவைத்துறையின் செல்வத்துறைகள் போலும்! பின்னர், தொழில் உற்பத்தித்துறை. ஜி.டி.பி.யில் இதன் பங்கு 30 சதவீதம்; மிஞ்சும் 20 சதவீதமே விவசாயம். ஜி.டி.பி.யில் விவசாய உற்பத்தி மதிப்பின் பங்கு குறைந்தாலும், விவசாய உற்பத்தி குறையவில்லை.
அன்று 10 ரூபாய்க்கு 500 கிராம் ஹார்லிக்ஸ் பாட்டில் விற்றபோது, தேங்காய் 3 ரூபாய். இன்று 100 ரூபாய்க்கு ஹார்லிக்ஸ் விற்கும் போதும் தென்னை விளையும் கிராமங்களில் தேங்காய் 3 ரூபாய்தான். ஜி.டி.பி.யில் விவசாயத்தின் பங்கு ஏன் குறைவாயுள்ளது என்பதற்குத் தேங்காய் விலை ஓர் உதாரணம். பொதுவாக நுகர்வோர் பொருள் விலைகளோடு ஒப்பிடும்போது விவசாய விளை பொருள்களின் விலைகள் தேக்கம் பெற்றதால் ஜி.டி.ப்பியில் விவசாய மதிப்பின் பங்கு குறைந்து காணப்படுகிறது.
அன்று பற்பசை 100 கிராம் 5 ரூபாய். இன்று அதே பற்பசை 50 ரூபாய். அன்று 15 ரூபாய்க்கு விற்ற அரிசியும் கோதுமையும் இன்று 30 அல்லது 40 ரூபாய். இப்படி விளை பொருள்களுக்கு விலையில்லா விட்டாலும் கூட, இந்தியாவில் விவசாய உற்பத்தியில் சராசரியாக 2 சதவீதம் வளர்ச்சி இருப்பது உண்மையில் எட்டாவது உலக அதிசயமே. இது எப்படி நிகழ்ந்து வருகிறது?
என் நண்பர் ஒரு சிறு விவசாயி. பால்மாடுகள் வைத்துள்ளார். 2 ஏக்கர் புஞ்சை. 1 ஏக்கர் நஞ்சை. கால்வாய் வறண்டதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நஞ்சையில் பயிரேற்றவில்லை. புஞ்சையில் சோளம், காய்கறிகள் போடுவார். வறட்சியினால் அவருக்குத் தொடர்ந்து நஷ்டம். இந்த ஆண்டு தை மாத மழையை நம்பி நஷ்டத்தைப் பொருட்படுத்தாமல் விவசாயத்தைத் தொடர்ந்தார்.
கால்வாயில் தண்ணீர் வந்ததால் நஞ்சையில் நெல் பயிரிட்டார். பால் கொள்முதல் செய்யும் பால் வியாபாரியிடம் 20,000 ரூ. கடன் வாங்கினார். எனது மாடுகளுக்கு வைக்கோல் தருவதாகக் கூறி என்னிடம் ரூ.10,000 கடன் வாங்கினார். மகளிர் சுய உதவிக் குழுவிலிருந்து கடன், நகை அடமானம் வைத்துக் கடன் வாங்கி புஞ்சையிலும் பயிரேற்றினார்.
மாசி, பங்குனி கோடை மழை ஒரு சொட்டுக்கூடப் பெய்யவில்லை. 30 மூட்டை நெல் அறுவடை எதிர்பார்த்தார். 18 மூட்டை விளைந்தது. நெல் சாகுபடியில் நிகர நஷ்டம் ரூ.6000. புஞ்சைப் பயிர்களும் கருகி முழு நஷ்டம். எனினும், அவர் மனம் தளரவில்லை.
மே 16 தேர்தல் நாளில் நல்ல மழை; மறு நாளும் தொடர்ந்தது. வைகாசிப் பட்டமாக சோளம், காய்கறிப் பயிரேற்ற நிலத்தை அவர் உழுது விதைக்கும் காட்சியைப் பார்க்கும் போது எப்பாடு பட்டாவது மண்ணைப் பசுமையாக்க வேண்டுமென்ற அவர் மனோபாவம் தான் இந்திய விவசாயத்தைக் காப்பாற்றுகிறது.
சற்று யோசித்துப் பார்த்தால் இவருக்குப் பாலில் வரும் லாபம் விவசாயத்தில் மறு முதலீடு ஆகிறது. கால்நடை வளர்ப்பை முக்கியத் தொழிலாகவும், விவசாயத்தை அவர் துணைத் தொழிலாகவும் கொண்டுள்ளது புலனாயிற்று.
நடுத்தர விவசாயிகளை எடுத்துக் கொண்டால், என் பார்வைக்குத் தெரிந்தவரை அதாவது தமிழ்நாடு முழுவதும் கிராமந்தோறும் நான் பயணித்த அனுபவத்தில் விவசாயத்தில் பள்ளி ஆசிரியர்களின் பங்கேற்பு முக்கியமானது. கிராமங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளிலிருந்து பெரிய ஊர்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள் வரை, ஆசிரியர்களில் பெரும்பாலோருக்குச் சொந்தமாக நிலம் உள்ளது. இவர்களுக்குக் கைநிறையச் சம்பளம் உண்டு. அதை அவர்கள் விவசாய முதலீடுகளாக மாற்றுகிறார்கள். மழை பெய்தால் லாபம். மழை பொய்த்துவிட்டால் நஷ்டம். அப்படி நஷ்டம் வந்தாலும் மறுசாகுபடி செய்யும் துணிச்சல் அரசின் மாதச் சம்பளம்.
download
இது தவிர, மாநில அரசு எழுத்தர்களில் சிலருக்கு நிலம் உண்டு. அவர்களும் ஒரு துணைத் தொழிலாக விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். நடுத்தர விவசாயிகளில் மற்றொரு பிரிவினரும் உண்டு. கிராமங்களில் டீக்கடை, மளிகை, பால்தரகு, மாட்டுத் தரகு, நிலத்தரகு, ஏலச்சீட்டு, ஓட்டுனர், நடத்துனர் என்று முக்கியத் தொழிலாகக் கொண்டவர்களும் விவசாயத்தைத் துணைத் தொழிலாகக் கொண்டு நஷ்டத்தை ஈடுகட்டுகிறார்கள்.
பெரிய விவசாயிகளில் அரசியல்வாதிகள் அதிகம். இவர்களுக்கு 50 முதல் 200 ஏக்கர் நிலம் இருக்கும். இவர்களுக்கு கோழிப் பண்ணை பால் பண்ணைகளும் உண்டு.÷அரசியல் சம்பாத்தியம் குறிப்பாக வளர்ச்சித் திட்டச் செலவில் ஒதுக்கிக் கொண்ட பணம் விவசாயத்தில் மறு முதலீடு ஆகிறது. இவர்களுக்கு விவசாயத்தில் நஷ்டம் வருவது இல்லை. லட்சக்கணக்கில் வங்கிக் கடனும் வாங்கியிருப்பார்கள். சிலர் லேவா தேவியும் செய்யலாம். இவர்களுக்கு நகரங்களில் பெருந்தொழிலும் உண்டு.
நூற்பு ஆலை, துணி ஆலை, சிமெண்டு, ஆற்றுமணல் வியாபாரம் என்று பல உண்டு. விவசாயத்தில் போட்ட முதலீடுகளுக்கு வருமான வரி விலக்கும் உண்டு. இவர்களுக்கு விவசாயம் துணைத் தொழில் என்பதைச் சொல்ல வேண்டுமா?
விவசாயத்தைத் துணையாகக் கொள்வோரில் இன்று ஒரு புதிய வர்க்கம் அரும்பி வருகிறது. அதாவது, அமெரிக்கா, துபை, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி என்று வெளிநாடுகளில் பணிபுரியும் கணினி மென் தொழில் பொறியாளர்கள், கட்டடப் பொறியாளர்கள் போன்றோர் ஒரு குறிப்பிட்ட அளவு தங்களின் சம்பாத்தியத்தைப் புதிதாக நிலம் வாங்கி விவசாயத்தில் முதலீடு செய்து வருகின்றனர். சிலர் போதுமென்ற மனத்தோடு இந்தியாவுக்குத் திரும்பி விவசாயத்தில், குறிப்பாக இயற்கை விவசாயத்திலும் மரம் வளர்ப்பிலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபடுகின்றனர். விவசாயத்தில் நஷ்டம் வந்தாலும் தாங்கும் சக்தி இவர்களுக்கு உள்ளதால் விவசாய முதலீடு தொடர்வதைப் பார்க்கலாம். எனினும், பாரம்பரியமாக விவசாயம் செய்வோர் மீண்டும் விவசாயம் செய்யத் தங்களின் வாரிசுகள் முன்வராத காரணத்தால் நிலத்தை விற்போர் உண்டு.
அப்படி விற்போரிடமிருந்து வாங்குவோர் பெரும்பாலும் மேற்கூறிய பிரிவில் வரும் அயல் நாட்டில் சம்பாதித்து உள்ளுரில் விவசாய முதலீடுகளாக மாற்றும் மென் தொழில் நிபுணர்களாக இருப்பார்கள்.
ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் அதாவது ஜி.டி.பி.யில் விவசாய உற்பத்தி மதிப்பு குறைந்தாலும் உற்பத்தி அளவு (ண்ய் வ்ன்ஹய்ற்ண்ற்ஹ்) உயர்ந்து கொண்டிருப்பதைத் தான் நாம் விவாதித்துக் கொண்டுள்ளோம். விவசாயம் செய்வோருக்கு வேறு முக்கிய வருமானம் உள்ளதால் விவசாயம் துணைத் தொழிலாக மாறித் தொடர்வதால் உற்பத்தி அளவில் மாற்றமில்லை.
தவிரவும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள், குறைந்த வட்டியில் கடன், புதிய தொழில் நுட்பங்கள், வருமானவரி விதிவிலக்கு போன்ற காரணங்களினாலும் விவசாய உற்பத்தி தொய்வில்லாமல் உள்ளது. இவ்வளவு இருந்தும் விவசாயிகளின் தற்கொலைகள் குறிப்பாகப் பருத்தி விவசாயிகளின் அவல நிலைக்குத் தீர்வு காண முடியவில்லை.
இந்தியாவில் பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் முதல் காரணம் விலை வீழ்ச்சி. விலையைக் குறைத்து பருத்தி அறுவடைக்காலத்தில் வேண்டுமென்றே இடைத்தரர்கள் அதிகம் கொள்முதல் செய்து இருப்புவைத்துக் கொள்வார்கள். சீசன் முடிந்ததும் வரத்துக்குறையும். விலை ஏறும். அதுவே தரகர்களுக்கு லாபம்.
பருத்தி விவசாயத்தில் நெல், கோதுமை போல் அரசின் கொள்முதல் நிகழ்வதில்லை. காட்டன் கார்ப்பரேஷன் பெயரளவில் உள்ளது. நல்ல விலைக்கு வாங்க முன்வருவது இல்லை. இந்த நிலைமை மாற வேண்டும்.
எனினும், விவசாயத்தில் உற்பத்தி இன்னும் மேலோங்க வேண்டுமெனில் முக்கியமாக வேலை செய்ய ஆட்களின் பற்றாக்குறை தீரவேண்டும். குளத்து வேலைத்திட்டத்தைச் சற்று மட்டுப்படுத்தி விவசாயப்பணி செய்யும்படி உகந்த திருத்தம் அவசியம்.
தென்னை அல்லது பழமர சாகுபடிக்கும் ஆட்களின் தேவை குறைவு என்பதால் மா, நெல்லி, மாதுளை, கொய்யா, சப்போட்டா சாகுபடியில் இறங்குகின்றனர். காய்கறி, நெல், எண்ணெய் வித்துப்பயிர்கள், பருப்புகள், புஞ்சை தானியப் பயிர்களுக்கு ஆட்களின் தேவை அதிகம். ஆள் பற்றாக்குறையினால் எண்ணெய் வித்து- பருப்பு வகைப் பயிர்களின் உற்பத்தியும் நிலப்பரப்பும் குறைந்து விட்டது.
vivasaayam 2
தமிழ்நாட்டில் தென்னை சாகுபடி கேரளத்தை மிஞ்சிவிட்டது. ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களிலும் தென்னை சாகுபடி மேலோங்கியுள்ளது. இதனால் தென்னை விவசாயிகளுக்கு விலை கிடைப்பதில்லை. இதற்குரிய விடையும் அஃதே.
தென்னை மர சாகுபடி, பழ சாகுபடி செய்வோரில் 100க்கு 90 சதவீதம் பேர் விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொள்ளாமல் துணைத் தொழிலாக நடத்திவருவது புலனாகும். ஒட்டு மொத்த உற்பத்தி, சேவை, ஏற்றுமதி மதிப்பில் வேளாண் விளைபொருள் மதிப்பு உயரும் போது தான் இந்தியாவில் விவசாயம் ஒரு முக்கியத் தொழில் என்ற தகுதியைப் பெறும். ஆனால், அதற்கான அறிகுறிகள் இல்லை.
துணைத் தொழிலாகிவிட்ட விவசாயம் இன்று ஜி.டி.பி அடிப்படையில் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.
(நன்றி: தினமணி நாளிதழ்)