கடந்த ஆண்டு மக்களிடையே ஆம் ஆத்மி கட்சி அதன் செயல்பாட்டாலும், கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நேர்மையான நிர்வாகத்திறமையால் அமோக செல்வாக்கு பெற்று, இந்திய நாட்டின் இரு மிகப்பெரிய கட்சிகளான காங்கிரஸ், பிஜேபியை வீழ்த்தி, டெல்லியில் ஆட்சி அமைத்தது.
ஓராண்டு நிறைவுற்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி நிறைவேற்றியுள்ள மக்கள் நல திட்டங்களில், அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 10,000 புதிய படுக்கைகள், அனைத்து வசதிகளுடன் “ஆம் ஆத்மி மொகல்லா கிளினிக்” மற்றும் முக்கிய 100 மையங்களில் “ஆம் ஆத்மி பாலி கிளினிக்” அமைத்தது, தனியார் மருத்துவமனைகள் தாறுமாறாக கட்டணம் வசூலிப்பதைத் தடுத்தது போன்றவை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி வாழ் மக்களிடையே நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் ஏழைகளுக்கு இலவச மருத்துவச் சேவை அளிக்கத் தவறிய 5 தனியார் மருத்துவமனைகளுக்கு முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அதிரடியாக ரூ. 600 கோடி அபராதம் விதித்துள்ளது.
டெல்லியில் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவச் சேவை அளிக்கப்படும் என்ற ஒப்பந்தத்தின் பேரில் தனியார் மருத்துவமனைகளுக்கு சலுகை விலையில் மாநில அரசால் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரசின் சலுகைகளைப் பெற்ற தனியார் மருத்துவமனைகள் ஏழை மக்களுக்கு இலவசச் சேவையை மறுத்ததையடுத்து 5 மருத்துவமனைகளுக்கு ரூ. 600 கோடி அபராதம் விதித்து கெஜ்ரிவால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐந்து தனியார் மருத்துவமனை விவரம்:
- ஃபோர்டிஸ் மருத்துவமனை, முஜேசார்.
2. மேக்ஸ் சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சாகெட்.
3. புஷ்பாவதி சின்கனியா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சிக் கழகம் , தெற்கு தில்லி.
4. தரம்ஷிலா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்.
5. சாந்தி முகுந்த் மருத்துவமனை, கிழக்கு தில்லி
இதுகுறித்து டெல்லி சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் ஹேம் பிரகாஷ் கூறுகையில், அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களை மேற்கொள்ள சில தனியார் மருத்துவமனைகள் தவறிவிட்டன. எனவே அவற்றிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் முக்கியமான 5 தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 600 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு அரசு நோட்டீஸ் அனுப்பி, ஒரு மாதத்திற்குள் இந்த தொகையைக் கட்ட வேண்டும் என்றும் , மேலும் ஏழை மக்களுக்கு இலவச சேவையை மறுத்தது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயர்நீதிமன்ற ஆணையின்படி கடந்த டிசம்பரில் ஆம் ஆத்மி அரசு மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இதுவரை விசாரணை நடத்தி, கடந்த வியாழக்கிழமை இந்த ஆணையை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வசூலிக்கப்படும் பணம் மருத்துவ மற்றும் சுகாதாரப்பணிகளுக்கு செலவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
தில்லியில் 42 மருத்துவமனைகளில் , ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க 640 உள்நோயாளி கட்டில்கள் ஒதுக்கப்பட்டு இருந்தாலும், அங்கு மருந்து மாத்திரை விலை அதிகமாவதால் கட்டில்கள் காலியாகவே உள்ளன. கூடுதலாக 240 கட்டில்கள் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், 60 முதல் 70 சதம் வரை தான் ஏழைகள் சிகிச்சை பெற முடிகின்றது என ஆய்வுகள் தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறினர்.