prabaharan

(பிரபாகரனும் நானும்: 6: பழ.நெடுமாறன்)

புலிகள் இயக்கத்திற்கான சின்னம், சீருடை, தொப்ப போன்றவற்றின் மாதிரிகளை மதுரையில் இருக்கும் போதுதான் பிரபாகரன் தேர்ந்தெடுத்தார். அவற்றை என்னிடம் காட்டி “எது நன்றாக இருகிறது” என்று கேட்டார். அவர் தேர்ந்தெடுத்ததையே நன்றாக இருக்கிறது என்று நானும் சொன்னேன்.

புலிச் சின்னத்தைத் தமது இயக்கத்தின் சின்னமாகப் பிரபாகரன் தேர்ந்தெடுத்தற்குப் பல காரணங்கள் உண்டு. சோழர்கள் காலத்தில் புலிக்கொடி தமிழர்களை எழுச்சி பெற வைத்தது. இராசராசன், இராசேந்திரன், போன்ற சோழ மாமன்னர்கள் ஆண்டபோது புலிக்கொடி வடக்கே கங்கை வரை கொடி நாட்டியதுச அதோடு கடல் கடந்து கடாரம் வரையிலும் பறந்தது. மேலும், சிங்களரை முறியடித்து இலங்கைத் தீவு முழுவதையுமே தமிழரின் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தது.

தமிழுணர்வை, இன உணர்வை, பகைவனுக்கு அஞ்சாத வீர உணர்வை, எதிரொலிக்கும் ஆழமான குறியீடாகவே புலிச் சின்னத்தைப் பிரபாகரன் தேர்ந்தெடுத்தார்.

தமது இயக்கத்திற்கு விடுதலைப் புலிகள் என்ற பெயரைச் சூட்டியதற்கும் ஆழமான காரணங்கள் உண்டு.

அடிமை சேற்றில் அழுத்தப்பட்டு கிடந்த தமிழினம் சிங்களப் பேரினவாத அரசின் ஆயுதப் படைகளை எதிர்த்து போராட வேண்டுமானால் தமிழர்களும் போர்க்குணம் மிக்கவர்களாக மாறவேண்டும் என்று பிரபாகரன் எண்ணினார். .தியாகம், துணிவு, சாவுக்கு அஞ்சாத வீரம், விடுதலை வேட்கை ஆகியவற்றைக் கொண்ட வீர வேங்கைகளாக தமிழர்களை உருவாக்கத் திட்டமிட்டே தமது இயக்கதிற்கு விடுதலைப் புலிகள் என்ற பெயரைச் சூட்டினார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சின்னத்தை மதுரை ஓவியர் நடராசன் என்பவர்தான் வரைந்து கொடுத்தார். புலிகளின் சீருடையை மதுரையைச் சேர்ந்த தங்கராசு என்னும் தையற்காரர்தான் வடிவமைத்துக் கொடுத்தார்.

“தம்பி’ பிரபாகரன் மதுரையில் பல மாதங்கள் வாழ்ந்தார். அவர்தம் நெருங்கிய தோழனும் புலிகள் இயக்கதில் முதன் முதல் களப்பலியானவருமான சங்கர் என்ற சத்தியநாதன் மதுரையில் ‘தம்பி’ மடியில் உயிர் துறந்தான். அவனுடைய வீர உடல் மதுரை மண்ணில்தான் எரிந்து சாம்பலாக இரண்டறக் கலந்தது.

ரஞ்சன், பஷீர்காக்கா, சந்தோஷம், புலேந்திரன் உட்பட 12 பேர்கள் அடங்கிய இரண்டாவது பயிற்சி முகாம் மதுரையில் பிரபாகரனின் நேரடியான கண்காணிப்பில் நடைபெற்றது.

அப்போது…

(சொல்கிறேன்…)