புதுடில்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜனை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சுப்பிரமணியசுவாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, சாமியின் தனிநபர் விமர்சனத்தை ஏற்க கொள்ள முடியாது தெரிவித்துள்ளார்.
பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி அவ்வப்போது வெடியைக் கொளுத்துவார். தற்போது அவர் ரிசர்வ் வங்கி கவர்னரை குறிவைத்து விமர்சனம் செய்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு, பிரதமர் மோடிக்கு சாமி எழுதிய கடிதத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜனை பதவியைவிட்டு நீக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். அதற்கு பிரதமரிடம் இருந்து பதில் ஏதும் இல்லை.

இந்த நிலையில் பிரதமருக்கு மீண்டும் இது குறித்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாக ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சாமி கூறியுள்ளார்.
அந்த பேட்டியில், “ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார். இவரால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. பா.ஜ.க. அரசின் கொள்கைக்கு விரோதமாக ரகுராம் ராஜன் செயல்படுகிறார். . பணவீக்கத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டார். மேலும் இந்திய பொருளாதாரம் குறித்த தவறான தகவலை தருகிறார். ஆகவே ரகுராம்ராஜனை அவரது பதவிக்காலம் முடியும் முன்னதாகவே நீக்க வேண்டும்” என்று சாமி தெரிவித்தார்.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அமைச்சர் அருண்ஜெட்லியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “ஆர்.பி.ஐ., ஒரு மதிப்பு மிக்க அமைப்பு. இதனை விமர்சிப்பதையோ, ஒரு தனிப்பட்ட விமர்சனத்தையோ என்னால் ஏற்று கொள்ள முடியாது. இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை” என்றார்.
Patrikai.com official YouTube Channel