மதுரை :
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., சீனிவேல் இன்று காலை மாரடைப்பால் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை உயிரிழந்தார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்றவர் சீனிவேலு. இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் மணிமாறனை விட 22,992 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
65 வயதாகும் எஸ்.எம்.சீனிவேல், கடந்த 25 ஆண்டுகளாக அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். 2001 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற சீனிவேல், 2006ம் ஆண்டு வரை திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்து வந்தார். தற்போது எம்.ஜி.ஆர்.,மன்ற மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
கடந்த மே 16ம் தேதி தேர்தல் நடந்த நிலையில், மே 17ம் தேதி சீனிவேலுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் மதுரை சொக்கிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிறகு சிகிச்சைக்காக, மதுரையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு சீனிவேலு மாற்றப்பட்டார். இங்கு கோமா நிலையில் இருந்து வந்த சீனிவேலுக்கு, இன்று காலை 5.30 மணிக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. இவரை பரிசோதித்த டாக்டர்கள், 6.20 மணிக்கு அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்தார்கள்.
இன்று கூடும் தமிழக சட்டசபை கூட்டத்தில் இவர் எம்.எல்.ஏ.,வாக பதவியேற்று கொள்ள வேண்டியவர் .