பொதுவாய், விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகள் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தியபிறகு வெடித்துச் சிதறி கடலில் விழுந்து வீணாகி விடுவது வழக்கம்.
அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் விண்வெளித் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளன.
விண்வெளி ஓடம் (ராக்கெட்) தயாரிப்பதில் முன்னோடியான அமெரிக்க இதுவரை 135 முறை பல்வேறு விண்வெளி ஓடங்களைச் செலுத்தியுள்ளது.
இதில் டிஸ்கவரி, அட்லாண்டிஸ் ஆகிய ராக்கெட்டுகள் முப்பது முறைக்கும் மேல் விண்வெளிக்குச் சென்று திரும்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ரஷியா ஒரே ஒருமுறை மட்டுமே விண்வெளி ஓடத்தை செலுத்தியுள்ளது. பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளும் ஒரு சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. சீனா இத்தகைய ராக்கெட்கள் தயாரிப்பதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை.
ஆனால். ‘மறு பயன் விண்வெளி ஏவு வாகனம்’ ஒன்றை தயாரிக்கும் பணியினை 15 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் இஸ்ரோ (ISRO) தொடங்கியது. எனினும், கடந்த 5 ஆண்டுகளாகத் தான் இதில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு முழுமூச்சுடன் விண்வெளி ஓடத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இத்திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.95 கோடி முதலீடு செய்துள்ளது. . இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரானது.இந்த விண்வெளி ஓடம் முழுவதும் இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது என்பதும், விண்வெளிக்கு சென்று திரும்பி வரும் இந்த ஓடத்தை பலமுறை மீண்டும் செலுத்த முடியும் என்பதும் இதன் சிறப்பம்சமாகும். சுமார் 10 முறை விண்ணில் ஏவக்கூடிய அளவுக்குத் தயாரிக்கப்பட்டுள்ள அந்த விண்வெளி ஓடத்தை தயாரிப்பதற்கு ஆன செலவும் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது சற்று குறைவுதான். இது 6.5 மீட்டர் நீளமும், 1.75 டன் எடையும் கொண்டது.
விண்வெளி ஓடத்தை முழுவதும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரித்திருப்பதன் மூலம் விண்வெளி ஆய்வு வரலாற்றில் இந்தியா முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதனால்தான் அதை இஸ்ரோ, ‘தொழில்நுட்ப பரிசோதனைக்கான மறு பயன் ஏவு வாகனம்’ (ஆர்.எல்.வி.-டி.டீ., ) என்று பெயரிட்டுள்ளது.
இந்தியாவின் முதல் ஏவு வாகனமான ஆர்.எல்.வி.-டி.டீ, மே, 23 திங்கட்கிழமை காலை, 9:30க்கு ஆந்திரத்தில், வங்கக் கடற்கரையோரம் உள்ளஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவாண் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
இந்த ஏவு வாகனத்தில் முதல் முறையாக முக்கோண வடிவமுள்ள ‘டெல்டா’ உலோக இறக்கைகளை இஸ்ரோ பயன்படுத்தியுள்ளது. இது விண்ணுக்குச் செல்லவும், பிறகு பூமிக்குத் தேவையான கட்டுப்பாட்டை வாகனத்திற்குத் தரும். இது பரிசோதனை என்பதால், ஆர்.எல்.வி.-டி.டீ.,யைத்தரையில் இறங்க வைக்காமல், கடலில்தான் இஸ்ரோ இறங்கவைக்கும். மிதக்கும் வசதி இல்லாத இந்த வாகனம், கடல் நீர் பரப்பில் அதிவேகமாக மோதும் என்பதால், சிதறிப் போக வாய்ப்புண்டு.
கடற்கரையிலிருந்து, 500 கி.மீ., தொலைவில் ஒரு ‘கற்பனை’ ஓடுபாதையில் இறங்கும் அந்த வாகனம், ஒலியைவிட ஐந்து மடங்கு வேக பயணத்தைத் தாங்குமா என்று பார்ப்பதே பரிசோதனையின் முதல் நோக்கம்.
அமெரிக்க ‘ஸ்பேஸ் ஷட்டில்’ வாகனங்களைப் போலவே இருக்கும் ஆர்.எல்.வி.-டி.டீ., அவற்றைவிட, 6 மடங்கு சிறியதாக இருக்கும். ஆனால், இந்தியா விண்வெளி வீரர்களை வைத்து அனுப்பப்போகும் அசல் வாகனம் நிச்சயம் பெரிதாகவே இருக்கும் என, இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் பல பரிசோதனை வாகனங்களை ஏவிப் பார்த்து. 15 ஆண்டுகள் கழித்தே இஸ்ரோ இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும்.
ஒரே முறை பயன்படுத்தப்படும் விண்வெளி ஏவு வாகனங்கள் மிகவும் செலவு பிடித்தவை. சராசரியாக ஒரு கிலோ எடைக்கு 3,35,000 ரூபாய் செலவாகும். இஸ்ரோவின் சோதனை வெற்றி பெற்றால், மறுபயன் வாகனங்களால் இந்தச் செலவு 1,34,000 ரூபாய் ஆகக் குறையும். ஆர்.எல்.வி.-டி.டீ., யின் உயரம், 6.5 மீட்டர். இதன் எடை 1.75 டன். இது பூமியின் வளி மண்டலத்திற்குள் மீண்டும் நுழையும்போது ஒலியின் வேகத்தைவிட அதிகமாகப் பயணிக்கும் என்பதால், இந்தச் சோதனையை, ‘மீஒலி பரிசோதனை’ என்றும் அழைக்கின்றனர். இந்த ஏவு வாகன சோதனைக்கு இதுவரை 95 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.
ரூ95 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த ஆர்.எல்.வி டிடி ராக்கெட் இப்போது முதல்முறையாகத் தொழில்நுட்பரீதியாக சோதனை முறையில் ஏவப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த ராக்கெட் பல செயற்கைக்கோள்களுடன் செலுத்தப்பட இருக்கிறது.
தற்போது கடலில் இறக்கப்படும் ராக்கெட் வரும் காலங்களில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஒடுதளத்தில் தரையிறக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.