சென்னை: சென்னை, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவில் கனமழை பெய்தது. கோடை வெப்பத்தில் தவித்த மக்கள் இதனால், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கும். ஆனால், இந்த வருடமோ, மார்ச் மாதத்திலேயே வெப்பம் தகிக்க ஆரம்பித்தது. இதனால் பொதுமக்கள் அனலில் தவித்தனர். குறிப்பாக முதியவர்களும், குழந்தைகளும் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்த நிலையில் சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தில் நேற்று பகலில் லேசான சாரல் மழை பெய்தது. அதேநேரம் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது. கிண்டி, ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கந்தன்சாவடி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், வடபழனி, தி.நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை கொட்டித் தீர்த்தது.
திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, பட்டினப்பாக்கம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது.
தாம்பரம், பல்லாவரம், கிண்டி ஆகிய பகுதிகளிலும் இரவு நேரத்தில் நல்ல மழை பெய்தது. அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாமல்லபுரம், திருக்கழுங்குன்றம், பம்பல், தாம்பரம், காட்டாங்குளத்தூர், செங்கல்பட்டு, வண்டலூர், பாப்மாமல்லபுரம் பகுதிகளிலும் கனத்த மழை பெய்தது.
கோடை அனலில் தவித்த மக்களுக்கு இந்த மழை பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது. இன்று காலையும் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மேகமூட்டத்துடன் வெய்யில் இன்றி இருக்கிறது.