sch

சென்னை:

சென்னை மடிப்பாகத்தில் செயல்படும் தனியார் பள்ளியிலிருந்து, அங்கு படிக்கும் அத்தனை மாணவர்களின் பெற்றோருக்கும் “தங்கள் மகன்/ மகள் பள்ளிக்கு வரவில்லை” என்று செல்போன் எஸ்.எம்.எஸ். செய்தி சென்றதால் பெற்றோர்கள் அனைவரும் பயந்து போய் பள்ளியின் முன் திரண்டனர்.  இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

சென்னை மடிப்பாக்கத்தில் இயங்கி வருகிறது சாய் மெட்ரிகுலேசன் ஹையர் செகண்டரி பள்ளி. இங்கு எல்.கே.ஜி. முதல் பன்னிரண்டாம் வகுப்பவரை சுமார் 3000 மாணவரகள் படிக்கிறார்கள்.

இன்று பிற்பகல் 3 மணி அளவில், அங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரின் பெற்றோருக்கும், “ உங்கள் மகன்/ மகள் இன்று பள்ளிக்கு வரவில்லை” என்று எஸ்.எம்.எஸ். செய்தி வந்தது.

ஒரு சில மாணவர்கள் விடுமுறை எடுத்திருந்ததால் அவர்களது பெற்றோர் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்ததால், அவர்களது பெற்றோர் பெரும் பதட்டம் அடைந்தனர்.

பள்ளிக்கு அனுப்பிய பிள்ளை, அங்கு இல்லை என்றால் வேறு எங்கே என்ற பயத்தில் பள்ளிக்கு பதறி அடித்து ஓடி வந்தார்கள். தங்கள் பிள்ளை எங்கே என்று கேட்டு பலரும் கதறி அழ ஆரம்பித்துவிட்டார்கள்.

பிறகுதான், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் செய்த தவறால் இது போல எல்லோருக்கும் தவறான எஸ்.எம்.எஸ். சென்றது தெரியவந்தது.

இதையடுத்து ஆத்திரமான பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம், “ஏன் இப்படி எஸ்.எம்.எஸ். அனுப்பினீர்கள்” என்று கேட்டார்கள்.

பள்ளி நிர்வாகத்தினரோ, “”கம்ப்யூட்டர் மிஸ்டேக்” என்று சுருக்கமாக பதில் சொல்லி அனுப்பினார்கள்.

அங்கு கூடியிருந்த பெற்றோர்கள், “இது எவ்வளவு பெரிய தவறு? பிள்ளை எங்கே என்று தவித்து ஓடி வந்தோம். பள்ளி நிர்வாகமோ வருத்தமும் தெரிவிக்கவில்லை, இனி இப்படி நேராமல் கவனத்துடன் இருக்கிறோம் என்றும் சொல்லவில்லையே” என்று புலம்பினார்கள்.

ஒரே நேரத்தில் சுமார் 3000 மாணவர்களின் பெற்றோரும் கூடியதால், பள்ளி செயல்படும் மடிப்பாக்கம் பகுதியில் பதட்டம் நிலவியது.

நாம், பள்ளி நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு இது குறித்து கேட்டோம்.

“தவறுதலாக அத்தனை மாணவர்களின் பெற்றோருக்கும் எஸ்.எம்.எஸ். போய்விட்டது. மறுபடி, வருத்தம் தெரிவித்து எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்கிறோம். பல்க் எஸ்.எம்.எஸ். என்பதால் தாமதமாகிறது. அதற்குள் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்துவிட்டார்கள்” என்றார்கள்.

கம்ப்யூட்டர் காலம், தவறே நடக்காது என்கிறோம். ஆனால் கம்ப்யூட்டர் தவறு ஆயிரக்கணக்கான பெற்றோருக்கு பதட்டத்தை ஏற்படுத்திவிட்டது.