சென்னை:
சென்னை எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் செயல்படும், தமிழக அரசின் அம்மா உணவகத்தில் இன்று காலை கேஸ் கசிவு ஏற்பட்டதால் மூடப்பட்டது. உணவருந்த வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள்.
தமிழக முதல்வரால் துவக்கிவைக்கப்பட்ட “அம்மா” திட்டங்களுள் ஒன்று, அம்மா உணவகம். காலையில் இட்லி, பொங்கல் மதியம் சாம்பார்,தயிர் மற்றும் கலவை சாதம் இரவில் சப்பாத்தி ஆகியன குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே ஏழை மக்கள் அம்மா உணவகத்தை மிகவும் விரும்புகிறார்கள்.
முதல்வர் ஜெயலலிதாவும், அம்மா உணவகம் சிறப்பாக செயல்பட சிறப்பு கவனம் செலுத்துகிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் செயல்படும் அம்மா உணவகத்ன் சமையல் அறையில், கேஸ் கசிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. சிலிண்டரில் இருந்து அடுப்புக்குச் செல்லும் ஓஸ் (டியூப்) அறுந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து சமையல் வேலை நிறுத்தப்பட்டது. உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லப்பட்டது.
அம்மா உணவகத்தை மூடும்படி, உயரதிகாரிகள் உத்தரவிட்டதால் இன்று காலை முதல் உணவகம் மூடப்பட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலைய வளாகத்திலேயே இந்த அம்மா உணவகம் இருப்பதால், அப் பகுதியில் வசிக்கும் ஏழை மக்கள் மட்டுமின்றி, ரயில் பயணிகள் பலரும் விரும்பி வரும் உணவகமாக இது இருக்கிறது.
சிலிண்டரில் பிரச்சினை என்றால் அதை சரி செய்தோ, அல்லது மாற்று சிலிண்டர் கொண்டோ உணவு தயாரித்திருக்கலாம்” என்று உணவருந்த வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய பலர் கூறினார்கள்.