thuu
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கையில்,
’’மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை இந்த ஆண்டிலேயே நடத்த வேண்டும் என்றும், முதல் கட்டமாக மே 1 ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஜூலை 24 ஆம் தேதியும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வை (NEET) நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பொது நுழைவுத் தேர்வு முடிவுகளை ஆகÞடு 17 ஆம் தேதிக்குள் வெளியிட்டு, செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முடித்துவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது இந்திய மருத்துவக் கவுன்சில், மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கிட டிசம்பர் 21, 2010 ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிட்டது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நுழைவுத் தேர்வு நடத்துவதில் இருந்து பின்வாங்கவில்லை. உச்ச நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் ஜூலை 18, 2013 இல் அப்போதைய தலைமை நீதிபதி அல்டமாÞ கபீர் தலைமையிலான அமர்வு இந்திய மருத்துவக் கவுன்சிலின் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு முடிவை இரத்து செய்து தீர்ப்பு அளித்தது. ஆனால், அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசும், தற்போதுள்ள பா.ஜ.க. அரசும் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தன. இதனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனில் ஆர்.தவே, ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால், ஆதர்ஸ்குமார் கோயல் மற்றும் பானுமதி ஆகிய ஐந்து பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து ஏப்ரல் 11 ஆம் தேதி இந்திய மருத்துவக் கவுன்சில் தேசிய தகுதி நுழைவுத் தேர்வை நடத்த அனுமதி வழங்கியது.
நடப்பு கல்வி ஆண்டிலேயே மருத்து பொது நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று சங்கல்ப் அறக்கட்டளை என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவுக்கு பதில் அளித்த மத்திய அரசு, மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வை இந்த ஆண்டே நடத்த விரும்புவதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. மத்திய அரசின் கருத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்த கால அட்டவணையுடன் தீர்ப்பளித்திருக்கின்றது.
சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைத்ததில் காங்கிரஸ் கூட்டணி அரசும், பா.ஜ.க. அரசும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் 2007 ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீடு முறை இதில் பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ப்பது தடைபடுவதுடன், 69 விழுக்காடு இட ஒதுக்கீடு முறைக்கும் ஆபத்து உருவாகி உள்ளது.
தேசிய தகுதி நுழைவுத் தேர்வை எழுதுவதற்கு கிராமங்களில் இருந்து வரும் ஏழை, எளிய, பின்தங்கிய ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களால் நகர்ப்புற மற்றும் உயர் வகுப்பினைச் சேர்ந்த மாணவர்களுடன் போட்டியிட முடியாது. இதனால் சமூக சமத்துவம் என்பது அடியோடு நிராகரிக்கப்பட்டு விடும் சூழல் ஏற்படும். பல்லாண்டுகளாக அழுத்தப்பட்டுக் கிடந்த மக்கள் சமூக நீதி வெளிச்சத்தில் படிப்படியாக முன்னேறி வரும் நிலையில், ஆதிக்க மனப்பான்மை கொண்டோர் தகுதி, திறமை பேசி மோசடி செய்ய நினைப்பதை அனுமதிக்க முடியாது.
மத்திய அரசு, மாநிலங்களை அடிமைப்படுத்தும் ஏகாதிபத்திய தர்பார் கல்வித்துறையிலும் தொடர்கிறது என்பதற்கு மருத்துவக் கல்விக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் ஒரு உதாரணமாகும். தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு, மத்திய அரசின் மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.