வரலாறு முக்கியம் அமைச்சரே..
தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்ததன் மூலம் தற்போது எல்லோரது பார்வையும் வைகோ மீது திரும்பி இருக்கிறது.
டிசம்பர் 5 1996 தேதியிட்ட ஏவுகனை வார இதழில் வெளியான வைகோவின் பேட்டி:
உங்களை தி,மு,க தலைமை, கட்சியிலிருந்து வெளியேற்றியதற்கு,என்ன காரணம்? தனியே ஒரு கட்சியை உருவக்க நேர்ந்தது, ஏன்?
திராவிடமுன்னேற்றக் கழகத்திலிருந்து நான் வெளியேற்றப்பட்டதற்குக் காரணமே, உயிரையும் பணயம் வைத்து நான் பாடுபட்டதுதான். தி.மு.க. தான் என் ஜீவன், என் வாழ்வு எனக் கருதி , அதனுடைய வெற்றிக்காகவும் அண்ணாவினுடைய கொள்கைகளுக்காகவும் பாடுபட்டு வந்தேன்.
எனனை முன்நிறுத்திக் கொள்ள, நான் முயன்றதேயில்லை. தி.முக வை விட்டு வெளியேற்றப்படுவேன் என்றோ, இன்றிருக்கும் சூழ்நிலை வரும் என்றோ, கனவிலும் கூட நான் கருதியதில்லை. கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், நான் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டுமென்ற எண்ணமோ, ஆசையோகூட இல்லாமல், மிசா கொடுமையில் பாளையங்கோட்டை சிறையிலும் சேலம் சிறையிலும் இருந்த காலத்தில்,என்ன உணர்வோடு இருந்தேனோ, அதே உணர்வோடு தான், கடைசி வரையிலும் இருந்தேன். இயக்கத்தினுடைய வளர்ச்சிக்காகப்பாடுபட்டேன்.
ஆனால், லட்சோபலட்சம் தொண்டர்களின் அன்பைப் பெற்று, இயக்கத்திற்காக அதிகமாகப் பாடுபட்டதும் ,அதனால் தொண்டர்கள் மத்தியில் எனகேற்பட்ட செல்வாக்கும், மக்களிடமிருந்த நன் மதிப்பும் என் மீது பொறாமை,அதிருப்தி, வெறுப்பு, போன்றவற்றை,கலைஞர் குடும்பத்துகுள்ளும், கலைஞரின் உள்ளத்துக்குள்ளும், ஏற்படுத்தி விட்டன. அது பூதாகரமாக வளர்ந்து, கழகத்தைவிட்டு என்னை வெளியேற்றும் அளவுக்கு முடிவெடுத்து, அவர்கள் செயல்பட்டனர். இதைப் புரிந்துக் கொண்டபிறகும்- நான் தலைமைக்கு எதிராக பேட்டி கொடுக்க வேண்டு மென்றொ, கட்சியில் பிரிவை உண்டாக்கவேண்டுமென்றோ, எந்தச் சூழ்நிலையிலும் நினைத்ததே கிடையாது. சகித்துக் கொண்டே இருப்போம். மண்டபத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தால் கூட போதும். கர்ப்பக்கிரத்துக்குள் சென்று, மூலவரின் பக்கத்தில் நிற்க வேண்டிய அவசியமில்லை என்றுதான்,நினைத்து வந்தேன்.
நான் கல்லூரியில் படிக்கும் போது மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தேன். அதிலிருந்து ஒரு அரசியல் பால பாடத்தைப் பயின்று கோண்டேன். மார்க்ஸ் நேசித்தது, பொது உடமைக் கொள்கை. அவர், பாட்டாளி மக்கள் மேம்பாடு கருதி, அங்கங்கு போய், குடியானவர்களின் உரிமைக்காக, பாடுபட்டு வந்தார். அந்த நாட்களில் அவரது அபரிமிதமான உழைப்பைப் பயன்படுத்திக் கொண்ட பொதுவுடைமை இயக்கம் அவரை திட்டமிட்டு புறக்கணிக்க ஆரம்பித்தது. அவர்கள் நடத்திய கூட்டத்துக்குக் கூட அழைக்கவில்லை .உள்ளே நுழையக்கூட, அவருக்கு அனுமதியில்லை. .அப்பொழுது, இயக்கம்தான் பெரியது, எதுவாக இருந்தாலும் சங்கடங்களை சகித்துக் கொள்ள வேண்டியதுதான்’’ என்று முடிவெடுக்கிறார் இதை காரல்மார்க்ஸ் தனது வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இது என் மனதில் ஆழமாகப் பதிந்திருந்த காரணத்தினால், மேதை மார்க்ஸ்க்கு நேர்ந்தது மாதிரியான நெருக்கடியும் ஒதுக்கலும் எனக்கும் நேர்ந்த போது, இயக்கம் தான் பெரிது என சங்கடங்களை சகித்துக் கொண்டு, ஒதுங்கிப் போகத்தான் முயற்சித்தேன்.
ஆனால்,அவர்கள் என்னை தனிமைப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்தார்கள். பொது கூட்டங்களுக்கு போககூடாது, என்னை யாரும் அழைக்கக்கூட்டாது என்றார்கள். கட்சியிலே எனது பெயரில் மன்றங்களை நடத்தியவர்களை, கழகத்தைவிட்டு வெளியேற்றினார்கள். தலைமைக் கழக பேச்சாளர்கள் பொது கூட்டங்களுக்குப் போக மாவட்டச் செயலாளர்களின் அனுமதி பெற வேண்டுமென்பது,.தி.மு.க. வர்லாற்றிலேயே கிடையாது. ஆனால் ,எனக்காகவே என் கால்களை கட்ட வேண்டும் என்பதறகாகவே கழகத்தின் சட்ட விதிமுறைகள் திருத்தப்பட்டது. அப்போது கூட இதை நான் பெரிதாக நினைத்து கொள்ள வில்லை; சகித்துக் கொண்டேன். இருப்பினும், அவர்கள் மதுரை மாநாட்டிலே, கோவை மாநாட்டிலே, உணவு இடைவேளையின் போது [கூட்டம் கலைகிற நேரத்தில்], திட்ட மிட்டு பேச அனுமதித்தார்கள். இருந்தும்,லட்சகணக்கானவார்கள் அங்கே எனது கருத்துகளைக் கேட்பதற்கு ஆர்வம் காட்டினார்கள். இதை அவர்களால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. கட்சியைவிட்டு இவனாகப் போகமாட்டான்; இவனை நீக்கி விடுவதுதான் சரி என்று, முடிவெடுத்தார்கள். அதை,திட்டமிட்டு மிகத் தந்திரமாக ,சாதுரியமாக, கலைஞர் நிறைவேற்றி முடித்துவிட்டார்.
பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்தே, இப்படிப்பட்ட முறையிலே தனக் கென்று ஒரு வளையத்தை உருவாக்கிக் கொண்டு, தன்னை முன்னிலைப் படுத்தி கட்சிக்குள்ளேயே தனக் கென்று ஒரு சக்தியை ஏற்படுத்திக் கொண்டு, பலரை வீழ்த்தியிருக்கிறார், கலைஞர்.தி.மு.க. வில் ஏற்ப்பட்ட பிளவுகள், சரிவுகள்.அனைத்துக்கும், கலைஞர் ஒருவரே காரணம்.
எனவே, கடைசியில் என்னை கட்சியிலிருந்து தூக்கியெறிவது ஒன்றும்,அவருக்கு சிரமமாக இல்லை.ஆனால்,நான்கு நாட்களுக்குள் ஒன்றுமில்லாமல் இருக்கிற இடம் தெரியாமல் போய்விடுவான். தூக்கியெறியுங்கள்’ என்று, மாறன் கலைஞரிடத்தில் சொன்னது, நிஜமாகவில்லை. மாறாக, அவர் மீதே திரும்பிற்று. ஐந்து கழகக் கண்மணிகள், என் பொருட்டு தீக்குளித்து மடிந்தனர், அந்தத் தணலிலே ஒரு இயக்கம் நடத்த வேண்டிய நிலைமை, உருவாற்று. மறுமலர்ச்சி தி,மு.க.வை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது
இப்போதுள்ள திமுகவை ஒரு மதிப்பீடு செய்ய முடியுமா?
லட்சக்கணக்கான தி.மு.க தொண்டர்களது உழைப்பால் உருவான கழகத்தை, என் போன்றவர்களது உழைப்பில்,இரத்ததில்,கண்ணீரில் உருவான கழகத்தை,அண்ணாவின் பாசமிகு அரவணைப்பால் வளர்க்கப்பட்ட கழகத்தை,கலைஞர் தன்னுடைய குடும்பத்தின் பிடிக்குள் கொண்டுவந்து நிறுத்திவிட்டார். அந்த நிலமையில் தான் இப்போது தி.மு.க உள்ளது.
மிகத் திறமையாக உழைப்பதற்கோ, செயல்படுவதற்கோ, பேசுவதற்கோ, சிறப்பாக சிந்திப்பதற்கோ, அங்கு இளைஞர்கள் எவரும் தயாரக இல்லை .திறமைசாலிகள் இருக்கிறார்கள்; இல்லையென்று சொல்லவில்லை, ஆனால், அவர்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. தி.மு.க வை நான் வெறுக்கவே முடியாது. அண்ணா உருவாக்கிய என்னைப் போன்ற லட்சகணக்கான தொண்டர்களால் வளர்க்கப்பட்ட கழகத்தை, ;நான் எப்படி வெறுக்க முடியும்?
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தி.மு.க பெருமளவு வெற்றி பெற்றுள்ளது பற்றி..
தேர்தலில் வெற்றி கிடைத்திருக்கலாம், தேர்தல் வெற்றி தோல்வி யென்பது ஒரு இயக்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்காது. நினைத்து பார்க்க முடியாத வெற்றி பெற்ற, ;வட மாநிலத் தலைவர்கள் சிலர், பத்தே மாதத்தில் செல்வாக்கை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
மகனுக்கு மகுடாபிஷேகம் நடத்தி இருக்கிறார். வெற்றி அவருக்கும் அவரது குடுப்பத்திற்கும் கிடைத்திருக்கிறதே தவிர,அண்ணா உருவாக்கிய கழகத்திற்குக் கிடைக்கவில்லை. தி.மு.க விக்கு வெற்றி கிடைத்திருக்கிறதென்று, நான் நினைக்கவில்லை. காரணம், தி.மு.க எந்தப் பாதையில் செல்ல வேண்டுமோ அந்தப் பாதையில் செல்ல முடியாத அளவுக்குப் பெரிய முட்டுக்கட்டைப் போட்டு,அந்த இயக்கத்தையே முடக்கி வைத்து விட்டார்,கலைஞர். அது அவருக்கு கிடைத்த வெற்றி. அண்ணாவின் இயக்கத்துக்கு ஏற்பட்ட ,மிகப் பெரிய வேதனைக்குரிய சரிவு. எனவே, கலைஞர், அவர் நினைத்ததை நடத்தி முடித்திருக்கிறார்.
இப்போது அமைதுள்ள தி.மு.க ஆட்சியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கலைஞரின் குடும்பம்,கட்சியின் மீதும் ஆட்சியின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதை, மக்கள் வெறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்றைக்கு நடக்கும் ஆட்சியை நடத்துவதே, நிழல் முதல்வராக இருக்கிற முரசொலி மாறனும் கலைஞரின் குடும்பத்தினரும்தான். இவர்கள்தான், நிர்வாகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். சட்ட வரம்புக்கு அப்பாற்பட்ட அதிகாரமையம் [ EXTRA CONSTITUIONAL AUTHORITY] ஒன்று வலுவாக உருவாகி விட்டது.ஊழலைப் போலவே, குடும்ப ஆதிக்கமும் [NEPOTISM] ஜனநாயகத்திற்கு ரொம்பவும் விரோதமானது, இது போன்ற தவறுகளை செய்யும் கலைஞர், நாளாவட்டத்தில் மக்களின் வெறுப்புக்கு ஆளாவதைத் தவிர்க்க முடியாது;
ஈழத் தமிழர் பிரச்சனையில் உங்களின் நிலைப்பாடு என்ன?
ஈழத் தமிழர் பிரச்சனையில் எந்த ஒரு சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் நாங்கள் ஒரே நிலையில் இருக்கிறோம். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. நான் தொடக்கத்திலிருந்தே திமுக.விலிருந்த காலத்திலிருந்தே, இதே கருத்தைதான் கொண்டிருக்கிறேன். நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தனி ஈழம் பற்றித்தான், பேசியிருக்கிறேன். இலங்கையின் இனப்பிரச்சனைக்கு, தனி ஈழத்தைத் தவிர வேறு தீர்வே கிடையாது. மற்றதெல்லாம், ஏமாற்று வேலைதான். அங்கே சிங்களரும், தமிழரும் சேர்ந்து வாழ்வதென்பதும், சகவாழ்வு என்பதும், சாத்தியமே அல்ல. திருச்சி மாநாட்டில் இது பற்றி லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். இன்றைக்கும் அதே நிலையில் தான் இருக்கிறோம்
இந்த பிரச்சனைக்குப் பிறகு, தமிழகத்து பத்திரிகைகள் பயங்கரவாதத்துக்கு ஆதரவு தருவது போல சித்தரிக்கின்றன, எதிர்க்கின்றன. சில பத்திரிக்கையாளர்களிடம் இது பற்றி கேட்டேன். எத்தனையோ தலைவர்கள் புலிகளை ஆதரிக்கும் போது, என்னுடைய ஆதரவை மட்டும் வேறுபடுத்தி பார்ப்பது ஏன் என்றேன். அதற்கு அவர்கள் ,’’நாங்கள் அந்தத் தலைவர்கள் சொல்வதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நீங்கள் இதில் சின்சியராக இருப்பதாக நினைக்கிறோம்’’ என்றார்கள்.
ஈழத் தமிழர்கள் போராட்டத்தை ஆதரிக்கும் நாங்கள், புலிகளை தள்ளி வைத்து ஆதரிக்க முடியாது. நாங்கள் ஈழத்தில் போராடும் புலிகளை ஆதரிக்கிறோம்.ஆனால்,கலைஞரோ,’நாங்கள் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறோம். புலிகளை ஆதரிக்க வில்லை’என்கிறார். கலைஞர், ஈழத் தமிழர் விஷயத்தில் பித்தலாட்டமும் ஆஷாடபூதி வேலையும் செய்கிறார் ,கலைஞர், ஈழத் தமிழர் பிரச்சனையில், தொடக்கத்திலிருந்தே இரட்டை வேடம் போடுகிறார். அதற்கு ஏராளமான சான்றுகளை என்னால் கூறமுடியும்.
இப்போது தமிழ் நாட்டிலிருந்து செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் மருந்து, பணம்,உணவு கொடுத்தோம். 500 க்கும் மேற்பட்டவர்கள், இரத்தம் கொடுத்தோம். பத்தாயிரத்துக்கும் ;மேற்பட்டவர்கள் இரத்தம் கொடுக்க இருப்பதற்கான பட்டியல் கொடுத்தோம். துயர் படும் ஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்காக, நான் எடுத்துக் கொண்டமுயற்சியினைப்போல், வேறு யாரும் எடுக்கவில்லை. இந்தப் பிரச்சனை குறித்து,அதாவது யாழ்பாணத்திலிருந்து, தமிழர்கள் வெளியேறிய காலத்தில், ஐ.நா.சபை பொது செயலாளர் ,புட்ரோஸ்காலிக் அவர்களுக்கு, திரும்ப திரும்ப பேக்ஸ் (fax] கொடுத்தேன்.அவரிடமிருந்து பதிலும் வந்தது. அதேபோல, போப் ஆண்டவரிடமிருந்தும் பதில் வந்தது. இநத விஷயத்தில் இந்தவிஷயம் குறித்து , உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கும் கடிதம் எழுதினேன். பிரிட்டன், ஆஸ்திரேலியா.நார்வே.ஜெர்மன். அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து பதில் வருகிறது. இந்தப் பிரச்னை மனிதாபிமான பிரச்னை, மனித உரிமைப் பிரச்னை எனக்கூறி , சர்வே தேசச் செஞ்சிலுவை சங்கத்துடன் ஜெனிவாவுக்கு தொடர்புக் கொண்டு, அதன் டைரக்டரிடமே பேசினேன். அதன் ஜாயிண்ட் டைரக்டரிடம் பேசினேன். அவர்கள் இது குறித்து எல்லாத் தகவல்களையும் அனுப்பச்சொன்னார்கள் அனுப்பினேன்.
ஆனால் இங்கிருந்து இரத்தம், மருந்து போன்றவை இலங்கைக்குப் போகவே இல்லை.காரண்ம், இந்தியாவில் இயங்கும் செஞ்சிலுவை சங்கத்தின் பொறுப்பில் டில்லியில் இருந்தவர்கள், கொழும்புத் தூதரகத்துடன் தொடர்பு வைத்திருந்தார்கள். நரசிம்மராவின் அரசு, அப்போது இங்கே இருந்தது. செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதியாக டில்லியில் இருந்தவர், வெறிபிடித்த இலங்கை சிங்கள அரசின் ஏஜெண்டாகவே செயல்பட்டு வந்தார்.
நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். மருந்துகளையாவது அனுப்புங்களென்று முறையிட்டேன். அதைக் கூட அவர்கள் அனுப்பவில்லை. இரத்தம் அனுப்பமுடியாதென்றார் .அவர். பதில் வெறுப்பேற்படுத்துவதாகவே இருந்தது. அங்கே சண்டை நடந்து கொண்டிருக்கும் போது, இதை எல்லாம் எப்படி அனுப்புவது என்றார். பாதிக்கப்பட்டவர்களூக்கு உதவ எதனையோ வழிமுறைகள் இருக்கிறது. ஆனால், எந்த விதத்திலும் உதவ இந்திய செஞ்சிலுவைச் சங்கம் முன்வரவில்லை. எந்தப் பொருளும் அங்கே துயர்படும் தமிழர்களுக்குப் போய்ச் சேரவில்லை.
செஞ்சிலுவைச் சங்கம் தங்களிடம் தரப்பட்டப் பொருட்களை உலகத்தில் எங்கு வேண்டுமானலும் கொண்டு போய் தராமுடியும் இதற்கென்று சிறப்பான சர்வதேச வழிகாட்டு நெறிகள் இருக்கின்றன. ருவாண்டா, .பாலஸ்தீனம், பூருண்டே, சோமாலியா, எத்தியோப்பியா, போஸ்னிய, இங்கெல்லாம், செஞ்சிலுவைச் சங்கம் நேரடியாய் சென்று உதவுகிறது. ஆனால் தமிழர்களை மட்டும் அவர்கள் மனிதர்களாகவே நினைக்கவில்லை. இலங்கைக்கு எந்தப் பொருளும் போய்சேரவில்லை.
இதற்கு காரணம்,முழுக்க முழுக்க அன்றிருந்த நரசிம்மராவின் சர்க்காரும், அன்றிலிருந்து இன்று வரை டெல்லியிலுள்ள இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பொறுப்பில் உள்ளவரும் தான் இதைப் பற்றி , பத்திரிக்கைகள் வாயிலாக தெரிவித்திருக்கிறேன். மத்திய சர்க்காருக்கு, குற்றஞ்சாட்டி கடிதம் எழுதியிருக்கிறேன். கலைஞர் ஆட்சிக்கு வந்தார். பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்காக , சேகரிக்கப்பட்ட பொருட்கள் அங்கு போய்ச் சேருவதற்காக, சிறு துருப்பைக்கூட எடுத்துப் போடவில்லை.
முதல்வரை நீங்கள் இது தொடர்பாக தொடர்பு கொண்டிருக்கலாமே?
இதற்கெல்லாம் முதல்வரை தொடர்புகொள்ள வேண்டியதில்லை. கடிதமும் எழுதவேண்டியதில்லை. ஏனென்றால், இந்தப் பிரச்சினையில் அவருக்கு நிறையவே பொறுப்பு இருக்கிறது, கடமை இருக்கிறது. அவரே செய்ய வேண்டும். இந்தப் பிரச்னை குறித்து, தமிழ் நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நாங்கள் தீர்மானம் போடுகிறோம், மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. கவனத்துக்கு வரவில்லை என்கிறார்கள்.
கலைஞருக்கு ஈழப்பிரச்சனை குறித்து கவலை – கவனம் இருந்தால், ஈழத் தமிழர்களின் மீது அக்கறை இருந்தால் அவரே செய்திருக்க வேண்டும். அங்கு செத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மருந்தும் பொருளும் அனுப்ப வேண்டுமென்பது அவருக்குத் தெரியாதா?.
அப்துல் ரவூத் எந்னும் இளைஞன் பெரம்பலூரில் தீக்குளித்தான். அவன் என்னுடைய இயக்க ஆதரவாளன். ஆனாலும் நான் என் கட்சியைச் சேர்ந்தவன் என்று வெளிப்படையாக சொல்லவில்லை. காரணம், இதை அரசியல் ஆக்கவிரும்பவில்லை என்பதுதான். அந்தத் தம்பி இறந்த செய்தி எனக்கு வருகிறது. முரசொலிக்கும் தகவல் அனுப்புகிறார்கள். முரசொலியில் செய்தி போடவில்லை. ரவுத் தீக்குளித்த செய்தி எனக்கு கிடைத்தவுடன் நான் வேதனையோடு ஒரு அறிக்கை விட்டேன். பெரம்பலூருக்குப் புறப்பட்டு வருவதாக செய்தி அனுப்பினேன். மாலைமுரசில் செய்தி வெளியானது.
கலைஞர் அதற்கு பிறகு தனது கட்சியின் மாவட்ட செயலாளரிடம் சொல்லி ரவுத் வீட்டுக்குப் போய் பாருங்கள் என சொல்லியிருக்கிறார். நான் அங்கு போய் பார்த்தது அந்தத் தம்பியின் குடும்பத்திடம் என்னுடைய வேதனையை வெளிப்படுத்திவிட்டு வந்தேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு பார்த்தால், இளைஞர் அணியின் கண்மணி என முரசொலி செய்திவெளியிட்டது. இளைஞரணி கண்மணி என்றால், அன்றைக்கே செய்தி வெளியிட வேண்டியதுதானே.! அந்தத் தியாகத்தைக்கூட கொச்சைப்படுத்துகிறார்கள்.
அந்தத் தம்பி, சாகும்போதுகூட, எனக்கு யாரும் நிதி உதவி தர வேண்டாம் எனது சாவை அரசியலாக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு சாகிறான். ஆனால் அதற்குப் பிறகு தி.மு.கவினர் இதை அரசியல் ஆதாயம் தேட வந்துவிட்டார்கள். இது தி.மு.கவினரின் மனோபாவம்.
ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு, தனி ஈழம். இவ்வளவு சூழ்நிலை ஏற்பட காரணம், இந்திய சர்க்கார்… அதாவது நரசிம்மராவ் அரசாங்கம் இலங்கையின் ராணுவ தாக்குதலுக்கு பின்னணியில் இருந்து எல்லா உதவிகளையும் செய்தது. ஆயுத உதவி செய்தது. இது குறித்து பிரதமர் அலுவலகம் முன் நாங்கள் போராட்டம் நடத்தினோம். இன்றைக்கு உள்ள தேவகவுடா அரசும் அதே பாணியில்தான் இருக்கிறதே தவிர, ஈழப்படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்காக எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை.
இனிமேலாவது கருணாநிதி ஏதாவது செய்வார் என்று நினைக்கிறீர்களா?
கலைஞரும் எதுவும் செய்வதாக இல்லை. அவர் இதில் அரசியல் பண்ண நினைக்கிறார். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். எங்களது சகோதரர் பாவாணன் எங்களது இயக்க இளைய தலைவர்களில் முக்கியமானவர். இலங்கை பிரச்சினைக்காக அவர் குரல் கொடுத்தார். அவரை கைது செய்து உள்ளே வைத்தார்கள். இதுபற்றி சட்டமன்றத்தில் கலைஞர் பேசும்போது, தீவிரவாதத்தை ஆதரிப்பதாக தங்களை காட்டிக்காண்டு கள்ளக்கடத்தலில் ஈடுபடுகிறார்கள் என்றார். ஈழத்தமிழர்களை.. விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களை எல்லாம், கள்ளக்கடத்தல் செய்பவர்கள் என்று கலை|ர் பழிசுமத்துகிறார். ஈழத்தமிழர்களுக்கு இதைவிட பச்சை துரோகத்தை எவரும் செய்ய முடியாது. வேறெதுவும் கிடையாது..
உதராணத்துக்கு கோவில்களுக்கு பக்தர்களும் போகிறார்கள்.. திருடங்களும் போகிறார்கள். அதற்காக கோவிலுக்கு போகிற எல்லோரையும் திருடர்கள் என சொல்ல முடியுமா. ஈழத்தமிழர்களின் ஆதரவாளர்கள் என சொல்லிக்கொள்கிறவர்களில் சிலர் கடத்தலிலோ சட்டத்துக்குப் புறம்பான வேறு நடவடிக்கைகளிலோ ஈடுபடலாம். அதற்காக ஈழத்தமிழர்களை ஆதரிக்கும் நல்லவர்களை எல்லாம் குற்றச்சாட்டுக்கு ஆளாக்குவது என்ன நியாயம்.
கலைஞர் எங்கள் கட்சியின் பாவாணன் பெயரை குறிப்பிட்டு அவர் பெயரில் வழக்கு இருக்கிறது என்கிறார். போலீஸ்காரர் போடும் வழக்குகள் எல்லாம் உண்மை என்றால் இதுவரை தி.மு.க.வின் போராட்டங்களின் போது அக் கட்சியினர் மீது போடப்பட்ட வழக்குகளும் உண்மையாகிவிடுமே. கலைஞர் இதை ஏற்றுக்கொள்வாரா? இன உணர்வுள்ள லட்சிய வேங்கையான பாவாணனை இழிவுபடுத்தும் விதத்தில் சட்டமன்றத்தில் கலைஞர் பேசியிருப்பது உலகத்தமிழர் இடையே அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கலைஞருக்கு இன உணர்வ கிடையாது. இதில் அரசியல் லாபத்தைத் தவிர எதுவும் கிடையாது. எங்களைப்பொறுத்தவரை ஈழத்தமிழரையும் ஈழப்போரட்டத்தையும் போராடும் புலிகளையும் ஆதரிக்கிறோமே தவிர, தமிழ்நாட்டில் எவ்வித தீவிரவாதததையோ பங்கரதவாதத்தையோ ஆதரிக்கவில்லை. இதை நாங்கள தெளிவு படுத்தி இருக்கிறோம்.
சந்திப்பு: எம்.பி. திருஞானம், பூம்புகார் ராஜேந்திரன்
(தொடரும்)