farmer-suicide
’’பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கையில்,
திருச்சியில் நேற்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் விவசாயிகள் எவரும் வறுமை அல்லது கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ள வில்லை என்றும், குடும்பப் பிரச்சினைகளால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். விவசாயிகளின் இறப்பை கொச்சைப்படுத்தும் ஜெயலலிதாவின் இந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திருச்சியில் நேற்று நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், விவசாயிகளுக்கான தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக பச்சைப்பொய்யை கூறியுள்ளார். 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், கரும்பு கொள்முதல் விலை 2011 ஆம் ஆண்டில் 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரூ.2,100 மட்டுமே தரப்பட்டது. ஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்றைய நிலையில் கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு 3,350 ரூபாயாக உயர்ந்திருக்கும். ஆனால், எந்த ஆலையும் 2,200 ரூபாய்க்கு மேல் கொள்முதல் விலை தருவதில்லை. அதுமட்டுமின்றி, கரும்பு உற்பத்தி 475 லட்சம் டன்னிலிருந்து 1000 லட்சம் டன்னாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரும்பு உற்பத்தி ஏற்கெனவே இருந்ததில் பாதியாக, அதாவது 245 லட்சம் டன்னாக குறைந்துவிட்டது. அதுமட்டுமின்றி, கருப்பு சாகுபடி பரப்பும் பாதியாக குறைந்து விட்டது. கரும்பை பொறுத்தவரை இது தான் 5 ஆண்டுகளில் ஜெயலலிதா படைத்த சாதனையாகும்.
அதேபோல், தமிழகத்தில் இரண்டாம் விவசாயப் புரட்சித் திட்டம் மக்கள் இயக்கமாக அறிவிக்கப்பட்டு, வேளாண் துறையில் 9% வளர்ச்சி எட்டப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால், வேளாண் துறை வளர்ச்சி மைனஸ் 12.1% (-12.1%) ஆக குறைந்துவிட்டது. விவசாயிகளின் தனிநபர் வருமானம் 2 முதல் 3 மடங்குக்கு மேல் உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அத்துடன், கரும்பு கொள்முதல் விலையில் நிலுவை வைக்க அனுமதிக்கப்படாது உடனடியாக உழவர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால், அ.தி.மு.க. பதவியேற்றதிலிருந்து இன்று வரை கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ.1,050 கோடி நிலுவை வைத்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு வருமானம் குறைந்ததுடன், ஈட்டிய வருமானமும் கிடைக்காததால் தான் உழவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 2423 உழவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். உண்மை இவ்வாறு இருக்கும் நிலையில், விவசாயிகள் எவரும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளவில்லை. குடும்பப்பிரச்சினையால் தான் தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறுவது விவசாயிகளை இழிவுபடுத்தும் செயலாகும். கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் உழவர்கள் தற்கொலை குறித்த வினாவுக்கு பதிலளித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் இராதா மோகன்சிங், ‘‘ஆண்மைக் குறைவு, காதல் தோல்வி உள்ளிட்ட காரணங்களால் தான் உழவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்’’ என்று கூறினார். இந்தக் கருத்துக்களுக்கும், ஜெயலலிதா திருச்சியில் நேற்று பேசிய கருத்துக்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. உழவர்கள் எந்த இழிவையும் தாங்கிக் கொள்வார்கள் என்ற ஆணவத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் தான் இவை.
அதுமட்டுமின்றி, உழவர்களின் பிரச்சினைகளை தீர்க்காத முதலமைச்சரைக் கண்டிக்கும் வகையில், திருச்சியில் நேற்று போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகளையும், உழவர் சங்கத் தலைவர்களையும் காவல்துறை கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்து வைத்திருக்கிறது. உழவர் சமுதாயத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா எந்த அளவுக்கு மரியாதை தருகிறார் என்பதற்கு இது தான் உதாரணம்.
முந்தைய தி.மு.க. ஆட்சியில் உழவர்களின் நிலை இன்னும் மோசமாக இருந்தது. அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 2423 உழவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கலைஞர் ஆட்சியின் 5 ஆண்டுகளில் 3390 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.2006 ஆம் ஆண்டில் 660 பேர், 2007 ஆம் ஆண்டில் 617 பேர், 2008 ஆம் ஆண்டில் 512 பேர், 2009 ஆம் ஆண்டில் 1060 பேர், 2010 ஆம் ஆண்டில் 541 பேர் என ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 500&க்கும் அதிகமாகவே இருந்திருக்கிறது. அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சியிலும் உழவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே இப்புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.
உழவர்களை பாதுகாக்க பாட்டாளி மக்கள் கட்சி அரசால் மட்டுமே முடியும். விவசாயத்துக்கு தேவையான அனைத்து இடுபொருட்களும் இலவசம், அனைத்து வகை பயிர்க்கடன்களும் இலவசம், கொள்முதல் விலை உயர்வு என பா.ம.க. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளே இதற்கு உதாரணம் ஆகும். இதை விவசாயிகளும் உணர்ந்திருக்கின்றனர். மே 19 ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் இதை அனைவருக்கும் உணர்த்தும். கடன்சுமையால் உழவர்கள் தற்கொலை இல்லாத உன்னத ஆட்சியை பாட்டாளி மக்கள் கட்சி வழங்கும் என உறுதி அளிக்கிறேன்.’’என்று தெரிவித்துள்ளார்.