stalin
தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற் கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:–
பணநாயகத்தை வைத்து ஜனநாயகத்தை வீழ்த்தி விடலாம் என்று திட்டமிடுகிறார்கள். அது நடக்குமா? இதுகுறித்து தொடர்ந்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். ஆளும் கட்சியான அ.தி.மு.க.வை ஆதரிக்கக் கூடிய காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் எந்தளவுக்கு பக்கபலமாக இருக்கிறார்கள் என்று தொடர்ந்து தி.மு.க. சார்பில் தி.மு.க. சார்பிலும், பல்வேறு கட்சிகளின் சார்பிலும் புகார்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் பெயருக்கு சிலரை மாற்றியதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த செய்தி கூட நேற்று கரூரில் 5 கோடி பறிமுதல் செய்யப்பட்ட செய்தி வந்துள்ளது.
கரூரில் அமைச்சருக்கு பினாமியாக இருக்கக் கூடிய அன்புநாதனின் குடோனிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்து இருக்கிறார்கள். ஆக, பறிமுதல் செய்தது மட்டுமல்ல அதனை மூடி மறைப்பதற்கு இங்கு இருக்கக் கூடிய அரசு அதிகாரிகள் எந்தளவுக்கு திட்டம் போடுகிறார்கள், அதற்கு தேர்தல் கமிஷனே உடந்தையாக இருப்பதும் உள்ளபடியே வேதனை அளிக்கக் கூடியது.
அவரது குடோன், வீடுகளில் நடைபெற்ற ரெய்டில் 12 பணம் எண்ணும் மெஷின்கள் மட்டு மல்ல 10.3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிக்கைவிட்டுள்ளது.
ஆனால் 5 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இந்த பணத்தை ஆம்புலன்ஸை பயன்படுத்தி கொண்டு சென்றதாக செய்தியில் சொல்லப்பட்டுள்ளது.
நம்மை ஏமாற்றியது மட்டுமல்ல, நாட்டையும் ஏமாற்றும் வகையில், காவல் துறையில் இதற்கு துணை நிற்கும் அதிகாரிகளும், அதற்கு பக்கபலமாக தேர்தல் கமிஷன் அதிகாரிகளும் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வரும்.
இனி தி.மு.க. பொறுக்காது. இப்போது சொல்கிறேன், நம் கழகத்தின் செயல் வீரர்கள், கூட்டணி கட்சி தோழர்கள், என் மீது அக்கறை கொண்டுள்ள நண்பர்கள் எங்காவது மக்களை விலைக்கு வாங்கும் திட்டத்துடன் யாராவது வந்தால் அதை தடுத்து நிறுத்துவது நம் கடமையாக இருக்க வேண்டும்.
அதிகாரிகளுக்கு தகவல் அளியுங்கள். அதன் மீது அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தலைமைக் கழகத்தின் தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் கொடுங்கள்.
தலைமைக் கழக வழக்கறிஞர்கள் இதற்கென்றே ஒரு முகாம் அமைத்து அறிவாலயத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் நட வடிக்கை எடுப்பார்கள். ஆக, இதை ஒரு எச்சரிக்கையாக அதிகாரிகள் எடுத்துக் கொண்டு உரிய முறையில் கடமையாற்றும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த 10–ந்தேதி தலைவர் கலைஞர் தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். ஒன்று இரண்டு இருந்தால் பரவாயில்லை 501 வாக்குறுதிகள்.
திருச்சிக்கு சென்ற ஜெயலலிதா அங்கு என்ன சொல்லி இருக்கிறார் என்றால், ”தி.மு.க.காரர்கள் நடித்து பிரச்சாரம் செய்கிறார்கள், நாடகம் நடத்துகிறார்கள்” என்று சொல்கிறார் என்றால், நான் அவருக்கு சொல்ல விரும்புகிறேன்,
“தி.மு.க.விற்கு நடிக்க வேண்டிய அவசியமில்லை,
இனி வரும் காலங்களில் மக்கள் பணியாற்றக் கூடியவர்கள் மக்களை தேடி செல்ல வேண்டுமே தவிர, அவர்களை தேடி மக்கள் வரக்கூடாது. அப்படி தி.மு.க.வினர் வரவில்லை என்றால், நீங்கள் 5 வருடம் இனி காத்திருக்க வேண்டியதில்லை, தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுக்கும் என்ற உறுதியை உங்கள் முன் அளிக்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.