
குன்னூர் தொகுதி வேட்பாளர் மாற்றக்கோரி மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது செருப்பு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்துக்காக கோத்தகிரி வந்த ஆ.ராசாவின் வாகனத்தை திமுகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கா.ராமசந்திரன். படுக இனத்தைச் சேர்ந்த இவர் கதர்வாரியத் துறை முன்னாள் அமைச்சரும் ஆவார்.
இந்நிலையில், குன்னூர் தொகுதி வேட்பாளராக முன்னாள் அரசு கொறடாவும், திமுக மாவட்டச் செயலாளருமான பா.மு.முபாரக் அறிவிக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் கா.ராமசந்திரனின் ஆதரவாளர்கள் பல்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், கோத்தகிரியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்கவும், முபாரக்குக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா வந்தார். அப்போது அவரது வாகனத்தை முற்றுகையிட்ட ராமசந்திரனின் ஆதரவாளர்கள் முபாரக்குக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், ஆ.ராசாவின் வாகனத்தின் முன்பு படுத்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆ.ராசா கார் மீது செருப்பை வீசியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Patrikai.com official YouTube Channel